வெளியிடப்பட்ட நேரம்: 01:07 (07/09/2018)

கடைசி தொடர்பு:07:12 (07/09/2018)

விமரிசையாக நடைபெற்ற கடைக்கண் விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்!

செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் 1,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கடைக்கண் விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.  

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைக்கண் விநாயகர் ஆலயம் உள்ளது.  இந்த விநாயகர் பெயரிலேயே கடைக்கண் விநாயகநல்லூர் என இந்த ஊர்ப் பெயர் பெற்றிருப்பது சிறப்பானதாகும். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்த விநாயகர் ஆலயம் என்பதும், சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் இந்த விநாயகரை வணங்கிச் சென்றதும் வரலாற்றுச் செய்தியாகும். இதனருகே ஆச்சாள்புரம் கிராமத்திலிருக்கும் சிவலோக தியாகராஜர் ஆலயத்தில் சமயக்குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரின் திருமணம் நடைபெற்றதாம். அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு, திருமணம் நடைபெறும் இடத்தை விநாயகர் கடைக்கண்ணால் காட்டியதால் இவருக்குக் கடைக்கண் விநாயகர் என்று பெயர் வந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.  

இத்தகைய சிறப்புமிக்க விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையில் மூன்று கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. அதன்பின் இன்று (செப். 06) காலை நான்காம் கால பூஜைகள் செய்யப்பட்டு யாகசாலையிலிருந்து மேள வாத்தியங்கள் முழங்க, கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.  ஆச்சாள்புரம் மகாலிங்க சிவாச்சாரியார் மற்றும் ரவி சிவாச்சாரியார் தலைமையில் கடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கோபுர கலசத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் இனிதே முடிவுபெற்றது. அப்போது அங்குக் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட அனைவரும் விநாயகப் பெருமானை மனம் உருக வணங்கினர்.  நீண்ட இடைவெளிக்குப் பின் பழைமைவாய்ந்த கடைக்கண் விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று இருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.