வெளியிடப்பட்ட நேரம்: 04:53 (07/09/2018)

கடைசி தொடர்பு:07:31 (07/09/2018)

`இந்தியனாக இருப்பதில் இன்று பெருமை கொள்கிறேன்' - தன் பாலின உறவு தீர்ப்புக்குப் பிரபலங்கள் வரவேற்பு!

இந்தியனாக இருப்பதில் இன்று பெருமை கொள்கிறேன் என்று உச்ச நீதிமன்றத்தின் தன் பாலின உறவு தீர்ப்புக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

தன் பாலின உறவை அங்கீகரிக்க வேண்டும். தன் பாலின உறவில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கும் சட்டப் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் எனக் கோரி எல்.ஜி.பி.டி குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். `சட்டத்தின் முன்னால், மதம், இனம், மொழி, பாலினம், பிறப்பின் அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது. ஆனால், சட்டப் பிரிவு 377, அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. தன் பாலின சேர்க்கையாளர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது. நிறைய மிரட்டல்களைச் சந்திக்கவேண்டி உள்ளது' எனக் கூறியே இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அதில், `தன் பாலினச் சேர்க்கையை தண்டனை என வரையறுக்கும் 377-வது பிரிவு இனி செல்லாது. எல்லாக் குடிமகன்களைப் போலவும், தன் பாலினச் சேர்கையாளர்களுக்கு வாழ்வதற்கான உரிமை உள்ளது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமையை மதிப்பதுதான் உச்சபட்ச மனிதநேயம்" எனக் கூறி சட்டப் பிரிவு 377-ஐ நீக்கியது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ``வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது மிகவும் தாமதம் தான். உச்ச நீதிமன்றம் நன்றியை எதிர்பார்க்கவில்லை.  இருப்பினும் அடிப்படை உரிமைகளை மதிக்கும் குடிமக்களின் சார்பாக நன்றி" எனக் கூறியுள்ளார். 

வரலட்சுமி சரத்குமார்

இதேபோல் தீர்ப்பு குறித்து வரவேற்பு தெரிவித்துள்ள வரலட்சுமி சரத்குமார். இந்தியனாக இருப்பதில் இன்று பெருமை கொள்கிறேன். நீங்கள் யாரை விரும்ப வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. நீங்கள் விரும்புவது உங்கள் முடிவுதான். யாரும் இல்லையென்று சொல்லவேண்டாம். ஒரே ஒரு முறை மட்டுமே வாழ்கிறோம் சந்தோஷமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்களைப் போல் நடிகை த்ரிஷா, ரன்வீர் சிங், அபிஷேக் பச்சன், சனல் குமார் சசிதரன், அனுஷ்கா சர்மா, கரண் ஜோகர், பிரீத்தி ஜிந்தா, ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பிரபலங்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க