நாடு தழுவிய பந்த்... பெட்ரோல், டீசல் விலை உயர்வை கையில் எடுத்த காங்கிரஸ்

சென்னையில் பெட்ரோல் விலை இன்று 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக மாதம் இருமுறை நிர்ணயிக்கப்பட்டு வந்த எரிபொருள் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் மாற்றியமைக்க எரிபொருள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற மே மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே சென்றது. வரலாற்றில் இல்லா புதிய உச்சமாகக் கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகாவது பெட்ரோல் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து உச்சம் பெற்றே வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.83.13 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.17 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 80 ரூபாயாக உயர்ந்த பெட்ரோல் விலை சில காசுகள்  மட்டும் உயர்ந்து  ஆகஸ்ட் 27-ம் தேதி 80.94 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ( செப்டம்பர் 7-ம் தேதி) பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 10 நாள்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வரும் 10-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள், இதில் கலந்துகொள்ள வேண்டும்  எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய கலால் வரி மற்றும் மாநில அரசுகள் விதிக்கும்  வாட் வரியை குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!