வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (07/09/2018)

கடைசி தொடர்பு:12:06 (07/09/2018)

`திருந்துங்க, இல்ல திருத்தப்படுவீங்க' - மதுரை பெண் எஸ்.பிக்கு ரவுடி புல்லட் நாகராஜன் வாட்ஸ்அப் மிரட்டல்!

தேனி மாவட்டம், ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி புல்லட் நாகராஜ். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். மதுரை சிறைத்துறை பெண் கண்காணிப்பாளருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரடிவு புல்லட் நாகராஜன்

ரவுடி புல்லட் நாகராஜின் அண்ணன் கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். வெளியில் வந்தவர், தம்பி நாகராஜியிடம், தன்னைச் சிறையில் அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜ், வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``இந்த கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண்முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சே கொன்றிருக்கிறார்கள். மதுரை ஜெயிலைப் பொறுத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையே கிடையாது. ஆள் கிடைச்சான்னா கமாண்டோக்களை விட்டு நொறுக்குகிறது. முதலில் திருந்துங்க, இல்லை திருத்தப்படுவீர்கள். அப்புறம் நான் பொறுப்பல்ல. லாரி ஏத்திடுச்சேன்னு பீல் பண்ணக்கூடாது. உன்ன மாதிரி சிறையில் கைதியை கைவைத்த ஒரே காரணத்துக்காக ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரித்துக்கொன்றது ஞாபமிருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க. நாங்கள் திருந்தி படிச்சு இப்ப பெரிய ஆளாக இருக்கோம். கைதி யாருக்காவது பிரச்னை வரட்டும். நானே டாக்டராக மாறி, நீ என்ன செய்தியோ, அதையே நான் செய்ய வேண்டியிருக்கும். ஆறிலும் சாவு நூறிலும் சாவு. அதைப் பத்தி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான்” என்று பகிரங்கமாக பெண் சிறைத்துறை காவல் கண்காணிப்பாளருக்கு மிரட்டல் விடுக்கிறார்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``காவல்துறை அதிகாரிகளுக்குக் கொலை மிரட்டல் என்பது இது புதிது இல்லை. சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளா இதற்கெல்லாம் பயப்படுபவர் இல்லை. அந்த ரவுடி வெளியிட்ட ஆடியோ விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.