முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் வழக்கு! - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு செப்டம்பர் 12 வரை அவகாசம் | tn cm edappadi palanisamy case - chennai high court gives time to Vigilance

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (07/09/2018)

கடைசி தொடர்பு:12:40 (07/09/2018)

முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் வழக்கு! - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு செப்டம்பர் 12 வரை அவகாசம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க செப்டம்பர் 12-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகக்கூறி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதல்வருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த ஜூன் 18-ம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த மனுமீது லஞ்ச ஒழிப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடுத்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `புகாரை ஏற்று, கடந்த ஜூன் 22-ம் தேதியே விசாரணையை டி.எஸ்.பி தொடங்கிவிட்டார். அதற்காக வரைவு அறிக்கையும் அனுப்பினார்' என்று கூறி விசாரணை நடைபெற்றுவருவதற்கான பதில் மனுவை தாக்கல் செய்தார். இந்தப் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க தி.மு.க தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 7 (இன்று) தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதி ஒத்திவைத்தார்.