`நேரம் போதவில்லை'- துப்பாக்கிச்சூடு விசாரிக்கும் அருணா ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு நியமனம் செய்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்துக்கு தமிழக அரசு கூடுதலாக 6 மாதம் அவகாசம் அளித்துள்ளது. 

aruna jegadeesan

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற மக்களின் முற்றுகைப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு.

துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக தகவல் அளிப்பவர்கள், சாட்சியம் அளிப்பவர்கள் கடந்த ஜூன் 22-ம் தேதிக்குள் சென்னை கிரீன்வேஸ் சாலை அல்லது தூத்துக்குடி பழைய சுற்றுலா மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டு, கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. மீண்டும் ஜூலை 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.   

கடந்த ஜூன் 3-ம் தேதி ஆணையத்தின் முதல்கட்ட விசாரணை தொடங்கியது. பின்னர், பிரமாணப் பத்திரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 2-வது கட்ட விசாரணை கடந்த ஜூலை 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது.  3-வது கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே வந்து விசாரணை செய்தார் அருணா ஜெகதீசன். அப்போது, இரண்டு பேரிடம் அரை மணி முதல் ஒரு மணி வரை விசாரணை நடத்தி வந்தார். இந்த விசாரணையே முடிவடையாத நிலையில் இன்னும் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்திட, அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, ஆணையத்துக்கு 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!