இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்! அடுத்த கட்டத்தில் நிர்மலாதேவி வழக்கு

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் மூலம் இவ்வழக்கு அடுத்தகட்டத்துக்கு வந்துள்ளது.

நிர்மலாதேவி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் அக்கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து காமராஜர் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் முருகன், பி.எச்டி. மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார்கள் கிளம்பிய நிலையில், இந்த மூவர் மட்டுமே காரணம் என்று வழக்கை முடித்துள்ளது சி.பி.சி.ஐ.டி.

இந்த நிலையில், வழக்கில் 200 பக்கங்கள் கொண்ட கூடுதல் மற்றும் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. கருப்பையா, விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி முன்பு தாக்கல்  செய்தார். கடந்த ஜூலை 13-ம் தேதி 1,160 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் இன்று கூடுதல் மற்றும் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணை இனி விரைவாக நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு விசாரணையின்போது, இந்த வழக்கில் இவர்கள் மூவருக்கும் தொடர்பு உள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதால் ஜாமீன் மனு விசாரணையை தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!