`ஓ.பி.எஸ்ஸிடம் விசாரிங்க; கூடுதல் தகவல் கிடைக்கும்'- கே.சி.பழனிசாமி ஓபன் டாக்

பழனிசாமி

குட்கா விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரிடம் விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல் சி.பி.ஐ-க்கு கிடைக்கும் என்று முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

குட்கா விவகாரத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குட்கா வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ, மூன்று பேருக்கு குறி வைத்துள்ளது. அவர்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துவரும் நேரத்தில், முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி சில உண்மைகளை நம்மிடம் தெரிவித்தார். 

 ``அ.தி.மு.க. தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதில், நான் தாக்கல் செய்த மனுவால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமே, நான்கு வாரங்களில் பதிலளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மேல்முறையீடு செய்ய வழியில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 13-ம் தேதி வருகிறது. அதில் நானும் ஆஜராக எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. 

அம்மாவின் அரசு என்று சொல்லி ஆட்சியை நடத்திவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் குட்கா வழக்கிலும் அம்மாவைப் போல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஓட்டுமொத்த அ.தி.மு.க.தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. சோதனைக்குப்பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். 

அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமியே நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. ஆனால், அதை அவர் செய்யவில்லை. குட்காவைத் தடையின்றி விற்க லஞ்சம் கொடுத்தபோது முதல்வர் பொறுப்பில் ஓ.பன்னீர்செல்வம்தான் இருந்தார். மேலும், போயஸ்கார்டனில் உள்ள சசிகலா அறையில் வருமானவரி சோதனை நடந்தபோது குட்கா தொடர்பான கடிதமும் சிக்கியது. எனவே, குட்கா வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரிடம் சி.பி.ஐ விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எனவே, தார்மீக அடிப்படையில் இருவரும் பதவி விலகினால் மட்டுமே தற்போது நடப்பது அம்மாவின் அரசாகும். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் குட்கா விவகாரத்தில் சிக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார். ஏன், டி.ஜி.பியைக் கூட மாற்றியிருப்பார்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!