கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தாவும் எலிக் காய்ச்சல்! - கோவையில் ஒருவர் பலி

'கேரளாவில் அதிவேகமாக பரவிவரும் எலிக் காய்ச்சல் கோவைக்கும் தொற்றிவிட்டது. கோவை அரசு மருத்துவமனையில் எலிக் காய்ச்சலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது'

எலி காய்ச்சலால் கோவையில் ஒருவர் பலி

 

கேரளாவில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த மழையால் அங்கு எலிக் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் கேரளாவில் எலிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் எலிக் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு  நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில்தான் கோவை அரசு மருத்துவமனையில் எலிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட கோவை கிணத்துக்கடவு அடுத்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 29 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த பத்து நாள்களாக கடுமையான காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். அப்படியும் காய்ச்சல் குறையாததால் நேற்றுமுன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் அவருக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சதீஷ்குமாருக்கு ஏற்கெனவே மஞ்சள்காமாலை, கிட்னி செயல் இழப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு ஆகிய பிரச்னைகள் இருந்ததாகவும் அதனுடன் சேர்த்து எலிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவருக்கு அளித்த சிகிச்சைகள் பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும்  கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

மேலும், வால்பாறையைச் சேர்ந்த பொம்மையன் என்ற முதியவருக்கும் எலிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாகச் சொல்லி அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, நீலகிரி மாவட்டம் ஐயங்கொள்ளி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவருக்கும், தேவாலா பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இரு இளைஞர்களுக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எலிக் காய்ச்சலுக்கான போதிய மருந்துகளும் மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரளாவை ஆட்டிப் படைக்கும் எலிக்காய்ச்சல் தமிழகப் பகுதிகளில் பரவ ஆரம்பித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!