` பிறந்தநாள் கொண்டாடதான் தண்டவாளத்தில் இப்படிச் செய்தோம்'- மாணவர்கள் வாக்குமூலம் 

தண்டவாளத்தில் ஆய்வு செய்யும் சைலேந்திரபாபு

சென்னை வேளச்சேரி - தரமணி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்புகளை வைத்ததாக மூன்று மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை வேளச்சேரி - தரமணி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 30, 4 ஆகிய தேதிகளில் சிமென்ட் சிலாப்புகள் வைக்கப்பட்டன. சிமென்ட் சிலாப்புகளைக் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் விபத்திலிருந்து ரயில்கள் தப்பின. தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க சிமென்ட் சிலாப்புகள் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸார் ஆகியோர் சேர்ந்து விசாரித்தனர். தொடர்ந்து, ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்புகளை வைத்தவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது, தனிப்படை போலீஸார், அந்தப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மேலும், சம்பவ இடத்தின் அருகில் உள்ள பகுதிகளிலும் விசாரித்தனர். அப்போது தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்புகளை வைத்தவர்கள் குறித்த விவரம் போலீஸாருக்கு கிடைத்தது. அதன்பேரில் விசாரித்து மூன்று மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் பெயர், விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் எதற்காக தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்புகளை வைத்தார்கள் என்ற தகவலை மட்டும் போலீஸார் தெரிவித்தனர். 

தண்டவாளத்தில் ஆய்வு செய்யும் சைலேந்திரபாபு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்புகள் வைக்கப்படுவதால் ரயில்கள் கவிழ வாய்ப்புள்ளது. இதனால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று விசாரித்தோம். அப்போது, மூன்று மாணவர்கள் ஜாலிக்காகவே சிமென்ட் சிலாப்புகளை வைத்தது தெரியவந்தது. அவர்களில் இருவர் வேளச்சேரியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் வேளச்சேரியில் உள்ள ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படிக்கின்றனர். மாணவர்களிடம் விசாரித்தபோது, ஒரு மாணவனுக்கு பிறந்தநாள். அதைக் கொண்டாட திட்டமிட்ட மாணவர்கள், சிமென்ட் சிலாப்புகளிலிருக்கும் இரும்புக் கம்பிகளை எடுக்கத்தான் தண்டவாளத்தில் அதை வைத்துள்ளனர். வேகமாக வரும் ரயில், சிமென்ட் சிலாப்புகளில் மோதும்போது அதிலிருக்கும் கம்பிகளை எடுக்கத்தான் அவ்வாறு செய்தோம் என்று கூறியுள்ளனர். அதுபோல சில சிமென்ட் சிலாப்கள் உடைந்துள்ளன. அதிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புக் கம்பியை கடையில் போட்டு அதில் கிடைத்த பணத்தில் மது, கஞ்சா, கேக் ஆகியவற்றை வாங்கி பிறந்தநாளையும் அந்த மாணவர்கள் கொண்டாடியுள்ளனர். மாணவர்களைக் கைது செய்து கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளோம்" என்றனர். 

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு துப்பு துலக்கிய 16 காவலர்களைப் பாராட்டிய ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களுக்கு வெகுமதியையும் வழங்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!