‘நிச்சயம் முடியட்டும் நிச்சயம் தர்றேன்' - வைக்கம் விஜயலட்சுமி பூரிப்பு

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்குத் திருமணம் உறுதியாகியிருக்கிறது என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். இந்த இனிப்பான தகவலை அவரே சொன்னால் இன்னும் தித்திக்குமே என்பதால் வைக்கம் விஜயலட்சுமியைத் தொலைபேசியில் அழைத்தோம். 

வைக்கம் விஜயலட்சுமி

“ஆமாங்க, எனக்குத் திருமணம் கன்ஃபார்ம். அவர் பேரு அனூப். கேரளாவிலுள்ள பாலா என்கிற இடத்தைச் சேர்ந்தவர். இன்டீரியர் டெக்கரேஷன் கான்ட்ராக்டரா இருக்காரு. அதைவிட அவர் ஒரு சிறந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். அவரோட மிமிக்ரிதான் எனக்கு அவர்மேல அதிகமான ஈர்ப்பை உண்டாக்கியது. இரண்டு வருடங்களுக்கு முன்பே நாங்கள் இருவரும் சந்தித்துவிட்டோம். நல்ல நண்பர்களாகப் பழகி வந்த எங்களுக்குள் இப்போது காதல் ஏற்பட்டிருக்கிறது. அனூப்தான் மிகத் தீவிரமாக என்னைக் காதலித்தார். நல்ல நண்பரால்தான் நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மிமிக்ரி செய்தே எனக்கு அவர் மீது காதலை வரவைத்துவிட்டார். எங்கள் இருவர் வீட்டிலும் சம்மதம் சொல்லிட்டாங்க. வர்ற திங்கள்கிழமை (10.09.2018) அன்று எங்கள் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடக்கிறது. அக்டோபர் 22-ம் தேதி வைக்கம் மகாதேவ் கோயிலில் திருமணம் நடக்கிறது” என்றவரிடம் உங்கள் திருமணத்தில் ஏதாவது ஸ்பெஷல் ஐடியா வைத்திருக்கிறீர்களா என்றதும், 

கண்டிப்பாக. அவருக்கு என் பாடல்கள் பிடிக்கும். எனக்கு அவர் செய்யும் மிமிக்ரி பிடிக்கும். அதனால், எங்கள் திருமணத்தில் இசைக் கச்சேரியும் உண்டு மிமிக்ரி கச்சேரியும் உண்டு என்று கலகலக்கிறார் வைக்கம் விஜயலெட்சுமி. சரி அவரோட போட்டோ கொடுங்க என்றால் வெட்கத்தோடு ' நிச்சயம் முடியட்டும் நிச்சயம் தர்றேன்' என்று சொல்லி கலகலக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!