பரோல் மனுவை வாபஸ் பெற்றார் நளினி! - மகள் திருமண ஏற்பாடுகளில் தீவிரம் | nalini has withdrawn her parole petition

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (07/09/2018)

கடைசி தொடர்பு:15:36 (07/09/2018)

பரோல் மனுவை வாபஸ் பெற்றார் நளினி! - மகள் திருமண ஏற்பாடுகளில் தீவிரம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், மகளின் திருமணத்துக்காகப் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த மனுவை வாபஸ் பெற்றார் நளினி. 

நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் மத்திய பெண்கள் சிறையில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இவரின் கணவர் முருகனும் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்தத் தம்பதியரின் மகளான ஹரித்ரா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஹரித்ராவுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆகையால், மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக 6 மாத காலம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் நளினி. 

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த பரோல் மனுவை வாபஸ் பெற்றுள்ளார் நளினி.