மின்னல் வேகத்தில் வந்த பைக்... போரூர் பாலத்தில் பறிபோன 2 உயிர்கள்

தங்கை நிச்சயதார்த்துக்கு சென்றபோது போரூர் பாலத்தில் நடந்த விபத்து

செங்கல்பட்டில் நடந்த தங்கையின் நிச்சயதார்த்தத்துக்கு பைக்கில் சென்ற அக்காள், அவரின் மகன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் ஜமுனா. இவரின் மகன் காமேஷ். இவர், கல்லூரியில் படித்து வந்தார். ஜமுனாவின் தங்கையின் நிச்சயதார்த்தத்துக்காக செங்கல்பட்டுக்கு  ஜமுனாவும் காமேஷூம் பைக்கில் சென்றனர். நிச்சயதார்த்த விழா முடிந்ததும் இன்று காலை அவர்கள் வீட்டுக்குத் திரும்பினர். பைக்கை காமேஷ் ஓட்டினார். போரூர்  மேம்பாலத்தில் வந்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் பயங்கரமாக மோதியது. இதனால் இருவரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்குப் போராடிய அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். தொடர்ந்து போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து விசாரித்தனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்து குறித்து  பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். பாலத்தில் லாரியை நிறுத்தி விபத்து ஏற்படுத்தியதற்காக டிரைவர் ராஜசேகரை போலீஸார் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "நிறுத்தப்பட்ட லாரியின் பின்பக்கத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தை ஆய்வுசெய்தபோது அதிவேகமாகப் பைக் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்" என்றனர்.

நிச்சயதார்த்தத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது விபத்தில் தாயும் மகனும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!