சீல் வைக்கப்பட்ட அறையில் ஆய்வு! செய்யாத்துரை நிறுவனங்களில் மீண்டும் ரெய்டு

மதுரை வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து சென்ற பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், அருப்புக்கோட்டையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரைக்குச் சொந்தமான அலுவலகங்களில் மீண்டும் சோதனை நடத்திவருகிறார்கள்.

செய்யாத்துரை

செய்யாத்துரைக்குச் சொந்தமான எஸ்.பி.கே. குழுமங்களின் தலைமையிடமான அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உட்பட முக்கிய இடங்களில்,  சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனைசெய்து கணக்கில் வராத 185 கோடி ரூபாய் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, வைர நகைகளையும் முக்கியப் புள்ளிகளுக்கு பணப் பரிமாற்றம்செய்த ஆவணங்களையும் கைப்பற்றினர். அது மட்டுமில்லாமல், கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர். 

செய்யாத்துரையின் நிறுவனங்களோடு முதலமைச்சர் எடப்பாடியின் சம்பந்தியும் பங்குதாரராக இருப்பதால், இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி எடுக்கப்பட்ட பல ஆவணங்களை அப்போது, அருப்புக்கோட்டையிலுள்ள செய்யாத்துரையின் அலுவலகத்தில் ஓர் அறையில் வைத்து சீல் வைத்தனர். இன்று, அந்த அறையைத் திறந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ஆய்வு செய்தனர். மீண்டும், செய்யாத்துரையிடமும் அவரது மகன்களிடமும், எடப்பாடியின் சம்பந்தியிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று சொல்கிறார்கள். வேறு எந்தத் தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்கவில்லை.

ஒருபக்கம் குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்துகிறது. இன்னொரு பக்கம் முதலமைச்சருக்கு வேண்டப்பட்ட செய்யாத்துரையின் அலுவலகங்களில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை நடத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!