`ரவுடி புல்லட் நாகராஜ் மீது நடவடிக்கை எடுங்கள்'- மதுரை போலீஸ் கமிஷனிடம் புகார்!

 

சிறைத் துறை அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்த ஆடியோகுறித்து விசாரணை நடத்த, மதுரை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம், ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி புல்லட் நாகராஜ். இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். மதுரை மத்திய சிறைத்துறை பெண் கண்காணிப்பாளருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. ரவுடி புல்லட் நாகராஜின் அண்ணன் கொலை வழக்கு ஒன்றில் தண்டனைபெற்று, மதுரை மத்திய சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையானார். வெளியில் வந்தவர், தம்பி நாகராஜிடம் தன்னைச் சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ரவுடி புல்லட் நாகராஜ், வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை வெளியிட்டது, தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மத்திய சிறைச்சாலை அலுவலர் ஜெயராமன், மதுரை மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்திடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், "மதுரை மத்திய சிறைச்சாலை முன்னாள் சிறைவாசி புல்லட் நாகராஜ், மதுரை சரக சிறைத் துறை துணைத் தலைவர், மதுரை மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர், சிறைத் துறை அலுவலர்கள் மற்றும் சிறைச்சாலை மருத்துவர் ஆகியோர்களை மிக மோசமான வார்த்தைகளால் பேசியும், கொலை மிரட்டம் விடுத்தும் ஆடியோவாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஆகவே, புல்லட் நாகராஜ் மீது வழக்குபதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட மதுரை மாநகரக் காவல் ஆணையர், கரிமேடு காவல் துறை ஆய்வாளர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!