`மத்திய அரசின் புதிய திட்டத்தால் தமிழகம் நச்சுக்காடாகும்!’ - எச்சரிக்கும் பேராசிரியர் ஜெயராமன்

``தமிழகத்தில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.  இதைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால், தமிழ்நாடு நச்சுக்காடாக மாறிவிடும்’’ என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.  

ஜெயராமன்

இதுபற்றி பேராசிரியர் ஜெயராமன் பேசுகையில், “பல்லாண்டுக் காலமாக, காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயு எடுத்ததால் ஏற்கெனவே விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தற்போது, புதிய வடிவில் பிரச்னை உருவெடுத்திருக்கிறது. “ஓப்பன் ஏக்கரேஜஸ் லைசென்ஸிங் புரோகிராம்” என்ற பெயரில், கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, மத்திய அரசு 55 பிளாக்குகளை ஏலம் விட்டுள்ளது.  இதில், 41 பிளாக்குகளை ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா கைப்பற்றியுள்ளது.  தமிழகத்தில், காவிரிப் படுகையில் 3 பிளாக்குகள். குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஏலம் எடுத்திருக்கிறது. இங்கு, ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க இருக்கிறது. மரக்காணத்திலிருந்து கடலூர் வரை ஒரு பிளாக்கும், பரங்கிப்பேட்டையிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஒரு பிளாக்கும் ஆக இரண்டு பிளாக்குகள் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆழமற்ற கடல் பகுதிகளிலும், தரைப் பகுதிகளிலும் அமைய உள்ள எண்ணெய்க் கிணறுகள்மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனம் ரூ.53 ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது.  

தமிழகத்திலிருந்து எடுக்கக்கூடிய பெட்ரோல், லிட்டர் ரூ.34-க்கும், டீசல் லிட்டர் ரூ.38-க்கும் சுமார் 20 வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. ஆனால், நம்மை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.83-க்கு வாங்க வைத்திருக்கிறது. இங்குள்ள கனிமவளம் சூறையாடப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்தை 'ஹெல்ப்' என்ற லைசென்ஸ் மூலம் தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த ஒரு லைசென்ஸ் மூலம் 15 ஆண்டுகளுக்கு எல்லா வகையான ரசாயனத்தையும் பயன்படுத்தி பூமிக்கு 500 அடிக்குக் கீழேயுள்ள நிலக்கரி, மீத்தேன் எடுக்கலாம். முன்றேகால் கிலோ மீட்டர் கீழேயுள்ள ஷேல் மீத்தேன், ஷேல் ஆயில் ஆகிய அனைத்தையும் எடுத்து, எந்த நாட்டிற்கும் அனுப்பலாம். விலையை அந்த நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ள முடியும். இதில், மாநில அரசு தலையிட முடியாது.  இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால், சுமார் 5 ஆயிரம் கி.மீ சதுர பரப்பளவுக்கு காவிரிப் படுகை நாசமாகும். விளைநிலம் பாழாகும்; டெல்டா பாலைவனமாகும்.  

எனவே, தமிழக அரசு இத்திட்டத்தை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும்.  மீறி அனுமதித்துவிட்டால், நாம் அகதிகளாய் வெளியேற வேண்டிய அவலநிலை உருவாகும்.  தமிழகம் நச்சுக்காடாய் மாறிவிடும்” என்று முடித்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!