அசராத அமைச்சர் விஜயபாஸ்கர்... அச்சத்தில் அ.தி.மு.க அரசு!

அசராத அமைச்சர் விஜயபாஸ்கர்... அச்சத்தில் அ.தி.மு.க அரசு!

குட்கா வழக்கு விசாரணையில், சி.பி.ஐ அதிரடியில் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அமைச்சர், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிக்கி இருப்பது ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், இத்தனை களேபரங்களுக்கு இடையிலும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், எவ்வித சலனமும் இல்லாமல், ''சி.பி.ஐ நடவடிக்கையை சட்டப்படி சந்திப்பேன்'' என்று சவால் விட்டுள்ளார். எதற்கும் அசராத வகையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடு இருப்பதால், அடுத்த அதிரடியில் சி.பி.ஐ இறங்கினால், ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

குட்கா வழக்கில், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ சோதனை நடத்தி உள்ளது. இவர்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர். 'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா-வை தமிழகத்தில் விற்பனை செய்ய உடந்தையாக இருந்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு, அரசு அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்கப்பட்டது' என்று குட்கா குடோன் அதிபர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலமும் அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்த செலவு கணக்கும் பல்வேறு முறைகேடுகளை அம்பலப்படுத்தியது. 

குட்கா ஊழல்,விஜயபாஸ்கர், ஜார்ஜ்

இந்நிலையில், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெளிப்படையாக பேட்டி கொடுத்து தன்னுடைய தரப்பின் நியாயத்தை வெளியில் சொல்லி இருக்கிறார். ''குட்கா ஊழல் நடந்தது உண்மை. அந்த சமயத்தில் நான் சென்னை போலீஸ் கமிஷனராக இல்லை. நல்ல அதிகாரிகளுக்கு அவர்களுடைய கடமையை நிம்மதியாக நிறைவேற்ற வழியில்லாத சூழ்நிலை உள்ளது'' என்று வெளிப்படையாக தனது வேதனையைக் கொட்டியிருக்கிறார். ஆனால், குட்கா விவகாரம் சி.பி.ஐ விசாரணையில் இருப்பதால், அதற்குள் செல்ல முடியாது என்றும் சொல்லி இருக்கிறார்.

அதனால், இந்தப் புகாரில் சிக்கியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில், ஜார்ஜ் பேட்டி அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அ.தி.மு.க அரசுக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், ''இந்தப் பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வேன். குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்'' என்று அசராமல் சொல்லி வருகிறார். ஆனால், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலின்

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி ராஜேந்திரனுக்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவ் மற்றும் அந்த லஞ்சத்தைக் கொண்டு போய் கொடுத்த இடைத் தரகர்கள், மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சர்  விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் கைது செய்யாத மர்மம் என்ன என்பது இன்னும் விளங்கவில்லை. அதுமட்டுமன்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில், அமைச்சரையும், டி.ஜி.பி-யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாகக் கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார்.

இதற்கிடையில், போலீஸ் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் மன வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், எதுவுமே நடக்காதது போல தைரியமாக இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ இருதலைக் கொள்ளி போல தவிக்கிறார். ஆட்சி மீது விழுந்துள்ள களங்கத்தை எப்படி துடைக்கப்போகிறாரோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!