வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (07/09/2018)

கடைசி தொடர்பு:18:49 (07/09/2018)

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் கூடுகிறது - 7 பேர் விடுதலை குறித்து ஆலோசனை?

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 9-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமைச்சரவைக் கூட்டம்

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கத் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது. இந்த உத்தரவை அடுத்து, 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். 

இந்தநிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடைபெற உள்ள கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், குட்கா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.