கொல்லத்தில் கொலைசெய்து நெல்லையில் உடலைப் புதைத்த கொலையாளிகள்!

கேரள மாநிலம் கொல்லத்தில் கொலைசெய்யப்பட்ட இளைஞரின் உடலை நெல்லை மாவட்டத்துக்குக் கொண்டுவந்து கொலையாளிகள் புதைத்துள்ளனர். அதைக் கண்டுபிடித்த கேரள போலீஸார், இன்று நெல்லையில் புதைக்கப்பட்ட இடத்தில் உடலைத் தோண்டிஎடுத்து உடற்கூறு பரிசோதனை செய்தனர். 

கொலையாளிகள் வீசிய உடல்

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிள்ளிக்கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சு. அவரும் அவருடைய நண்பரான பாம்பு மனோஜ் என்பவரும் சேர்ந்து அந்தப் பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள்மீது கொல்லம், கிள்ளிக்கொல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாம்பு மனோஜ், ஒரு வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தச் சமயத்தில் பாம்பு மனோஜ் வீட்டுக்கு ரஞ்சு அடிக்கடி சென்று உதவிகள் செய்துவந்துள்ளார். அப்போது ரஞ்சுவுக்கும் பாம்பு மனோஜின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில், அதுவே தவறான உறவாக மாறியுள்ளது. 

இந்தநிலையில், சிறையில் இருந்த பாம்பு மனோஜ், கடந்த மாத தொடக்கத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அப்போது, தனது மனைவியுடன் நண்பன் ரஞ்சுவுக்கு இருந்த தொடர்புபற்றி அறிந்ததும் ஆத்திரம் அடைந்துள்ளார். அதனால் பாம்பு மனோஜ், தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கொலைசெய்யத் திட்டமிட்டு, அவரை மதுவிருந்துக்கு அழைத்துள்ளார். மது போதையில் இருந்த ரஞ்சுவை ஆகஸ்ட் 15-ம் தேதி, 5 பேரும் சேர்ந்து அடித்துக் கொலைசெய்தனர். 

பின்னர், அவர்கள் அங்கிருந்து இரண்டு கார்களில் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர். ரஞ்சுவின் உடலை காரில் ஏற்றி வந்திருக்கிறார்கள். அந்த கார், நெல்லையின் புறநகர் பகுதியான பொன்னாக்குடி அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வந்தபோது பழுதடைந்தது. அதனால், அதில் இருந்த உடலை மற்றொரு காரில் எடுத்துச்சென்று, அங்கு தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய்க்காகத் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டுச் சென்றுவிட்டனர்.

ரஞ்சு கொல்லப்பட்ட விவகாரத்தைக் கண்டுபிடித்த கேரளாவின் கிள்ளிக்கொல்லூர் போலீஸார், இது தொடர்பாக உன்னி என்பவரை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர். கைதுசெய்யப்பட்ட உன்னி அளித்த தகவலின்பேரில், கேரள போலீஸார் இன்று நெல்லைக்கு வருகைதந்தனர். கொலையாளி உன்னி அடையாளம் காட்டிய இடத்தில் ரஞ்சுவின் உடலைத் தோண்டி எடுத்து, உடற்கூறு ஆய்வுசெய்தனர். இந்தச் சம்பவத்தால், நெல்லை புறநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!