`10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவர்’ - கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரும் மு.க.அழகிரி

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு மதுரை பால்பண்ணை அருகே சந்திப்பில் வெண்கலச் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அழகிரி கடிதம் எழுதியிருக்கிறார். 

அழகிரி

கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து தி.மு.க-வில் தன்னை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அழகிரி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். அதற்காக, சென்னையில் திருவல்லிக்கேணி காவல்நிலையம் முதல் கருணாநிதி நினைவிடம் வரை, தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பேரணி நடத்தினார். இந்தநிலையில், கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், `தமிழக முதல்வராக 5 முறை பொறுப்பேற்றவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், தி.மு.கழகத்தை, பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு கட்டிக் காத்தவரும் பல்வேறு சோதனைகளைத் தாங்கி அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரும், 10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவருமான கருணாநிதி இயற்கை எய்தியதை, உணர்வுள்ள உண்மையான தொண்டர்களும் தமிழர்களும் தாங்கிக்கொள்ள முடியாமல் இன்று கண்ணீர் வடிக்கின்றனர். இத்தகு சிறப்புமிகு கருணாநிதிக்கு, நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரிலுள்ள பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கலச் சிலை' அமைக்க அனுமதி வழங்கி உதவிட மிகவும் வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி ஆணையருக்கும் அழகிரி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை மதுரை முன்னாள் மேயரும், அழகிரி ஆதரவாளருமான பிஎம் மன்னன் மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகரை நேரில் சந்தித்து வழங்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!