'ஷோபியாவை பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது' - காவல்துறையைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின்

'தூத்துக்குடி மாணவி ஷோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல்செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்

சென்னையிலிருந்து 3-ம் தேதி விமானம்மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பிஹெச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவி லூயிஸ் ஷோபியா என்பவர் பயணித்துள்ளார். அப்போது, விமானத்தில்வைத்து பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக என்று கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பியுள்ளார். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடன், மீண்டும் தமிழிசையைப் பார்த்து பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷம் எழுப்பியுள்ளார். அதையடுத்து, தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷோபியாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், ஷோபியாவின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்வதற்கு காவல்துறை முயற்சி செய்துவருகிறது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'பாசிச பா.ஜ.க ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி ஷோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல்செய்ய தமிழக அரசு முயல்வது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி சம்மன் அனுப்பி, மாணவியைப் பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது. மாணவி ஷோபியா, கனடா சென்று மேற்படிப்பைத் தொடர, தமிழக அரசு அவர்மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். மேலும், 'பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை' என்பதை உணர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் தான் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!