வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (07/09/2018)

கடைசி தொடர்பு:13:10 (08/09/2018)

``கல்வி, சுகாதார முதலீடுகளை மத்திய அரசு செலவாகக் கருதுகிறது!" - முன்னாள் நிதிக்குழு உறுப்பினர்

``கல்வி, சுகாதார முதலீடுகளை மத்திய அரசு செலவாகக் கருதுகிறது!

சென்னைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறை மற்றும் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இணைந்து 'இந்தியாவில் பொது நிதி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். இதில் 14 வது நிதிக்குழு உறுப்பினரும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியருமான எம்.கோவிந்த ராவ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில், வங்கித்துறை தனியார்மயமாதல், செயல்படாத சொத்துகள், அரசின் கொள்கை முடிவுகளில் தனியாரின் ஆதிக்கம், 15 வது நிதிக்குழுவில் உள்ள குறைபாடுகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன. அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டு பேசினர்.

முதலில் தமிழக வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருணாசலம் பேசுகையில், “வங்கிகள் தேசியமயமானபோது 100% அரசாங்கத்துக்குச் சொந்தமானது எனப் பெருமையாகக் கூறப்பட்டது. ஆனால் இன்று அரசு, வங்கிகளின் பெரும்பாலான பங்குகளை எல்லாம் ஒரு சில தனியார் கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்த்து பொதுத்துறை வங்கிகளின் நிலைகள் நீர்த்துப்போகச் செய்கிறது. அவ்வாறு வங்கிகளைத் தனியார்மயமாக்க எடுத்துவரும் சீர்திருத்தங்களை எதிர்த்து ஊழியர்கள் போராடி வருகிறார்கள். வங்கிகள் என்றும் அரசின் வசம்தான் இருக்க வேண்டும். இன்று பொதுத்துறை வங்கிகள் இருக்கும் நிலைக்கு அரசின் தனியார்மய கொள்கைகள்தான் காரணம். 19 பொதுத்துறை வங்கிகளில் இரண்டு வங்கிகள் மட்டுமே லாபம் ஈட்டுகின்றன” என்றார்.

அடுத்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் பேசுகையில், “தேசியமயமாக்க காலத்திலிருந்து இன்று வங்கிகள் நீண்ட தூரம் கடந்து வந்திருக்கின்றன. இன்று விவசாயிகள், தொழிலாளர்கள் அனைத்துத் தரப்பினரும் வங்கியை அணுகுவது சாத்தியமாகியிருக்கிறது என்றாலும், இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அரசாங்கத்தின் கொள்கைகள் வங்கிகளை முன்னோக்கி எடுத்துச் செல்லாமல் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றன” என்றார்.

மத்திய அரசு, நிதிக்குழு முன்னாள் உறுப்பினர்

பேராசிரியர் எம்.கோவிந்த ராவ் பேசுகையில், “ 'பொருளாதாரத் துறையில் இயங்குபவர்கள் பொது மக்களுக்காக எழுத வேண்டும், பொருளாதார நிபுணர்களுக்காக எழுதக் கூடாது' எனப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் ராஜா செல்லையா கூறுவார். அரசாங்கம் என்பது சமூகத்தின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். ஆனால், யதார்த்தம் என்பது அவ்வாறாக இல்லை. சந்தைகள் சரிந்தால் அரசாங்கம் தலையிட வேண்டும். அரசாங்கமே சரியும்போது அதைச் சமாளிப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். தனியார் துறையினர் மோசமாக இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்கள் அரசாங்கங்களின் முடிவுகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மத்திய நிதி அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் அனைத்து வங்கிகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர். வங்கிகளின் முடிவுகளுக்கு அவர்கள் ஏன் பொறுப்பாக்கப்படவில்லை. வங்கிகள் தனியார்மயமானால் ஏழை மக்களை ஒதுக்கிவிடுவர்.

இந்தியாவின் கடன் என்பது உள்நாட்டு உற்பத்தியில் 75 சதவிகிதமாக இருக்கிறது. இது வளர்கின்ற நாடுகளிலேயே அதிகம். இந்தியாவில் 43% மக்கள் தொகை உள்ள மாநிலங்கள் தான் தேசத்தின் வருமானத்தில் 64% பங்களிக்கின்றன. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 3 சதவிகிதமும் மருத்துவத்துக்கு 1.2 சதவிகிதமும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அரசாங்கம் நுகர்வோருக்கு வழங்குவதை மானியம் என்றழைக்கிறது, ஆனால், தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை ஊக்கத்தொகை என அழைக்கின்றனர். இதுதான் அவர்களின் பாரபட்சம்.”

மத்திய அரசு திட்டங்கள்:

மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களைச் சாடிய கோவிந்த ராவ் ”மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களின் மூலம் மாநிலங்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. மத்திய அரசு பல்வேறு பிரிவுகளுடன் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் மாநிலங்களையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு அவர்களின் நிதி பங்களிப்பையும் எதிர்பார்க்கிறது. ஆனால், முழு கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. மாநிலங்களை நம்பாத மத்திய அரசு தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த மட்டும் மாநில அரசுகளைக் கட்டாயப்படுத்துகின்றன. கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்வதை அவர்கள் மூலதனமாகப் பார்க்காமல் செலவாகப் பார்க்கின்றனர்” என்றார்

15 வது நிதிக்குழு: 

15 வது நிதிக்குழு முன் உள்ள நிபந்தனைகளைக் கடுமையாக விமர்சித்த கோவிந்த ராவ், “நிதிக்குழு என்பது மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் நடுநிலையாகச் செயல்பட வேண்டும். மத்திய அரசு தன்னிடம் உள்ள நிதி எல்லாம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்றும், மாநிலங்களுக்கு வழங்குகின்ற நிதியை ஏதோ ஈகையாகத் தருவதைப்போல உணர்கிறது. அரசியல் நிர்ணய சபை விவாதத்திலே மத்திய அரசுடைய நிதி இந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதிக்குழு மத்திய அரசிடம் குறைத்து மாநில அரசைக் கடிக்கிறது. 15வது நிதிக்குழு முன் வைத்துள்ள நிபந்தனைகள் அனைத்தும் தர்க்கமற்றவையாகவே இருக்கின்றன” என்றார்.


டிரெண்டிங் @ விகடன்