`அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை’ - திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்த தொழிலாளர் நலத்துறை | Government warns theater owners for sale the food item over rate

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (07/09/2018)

கடைசி தொடர்பு:21:40 (07/09/2018)

`அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை’ - திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்த தொழிலாளர் நலத்துறை

திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்குப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பேருந்து நிலையங்களிலுள்ள உணவகங்களிலுள்ள உணவுப் பொருள்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட பல மடங்கு அதிகமாக விற்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்துவருகிறது.  இதுதொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை, 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில் உணவுப்பொருள்களை அதிக விலைக்கு விற்ற 72 கேன்டீன் உரிமையாளர்கள் மீதும், 38 தியேட்டர்கள் மற்றும் 4 உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருள்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல,`சாலையோரக் கடைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் விலைக்குப் பொருள்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு குறைத்து விற்று மோசடி செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.