தூத்துக்குடி காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான ஷோபியாவின் தந்தை! - பழைய பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைப்பு

விமானத்தில், ”பாசிச பி.ஜே.பி ஒழிக” என கோஷம் எழுப்பிக் கைதான தூத்துக்குடி மாணவி ஷோபியா, விசாரணையின்போது பழைய பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக அளிக்கப்பட்ட சம்மனின்படி, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை சாமி இன்று இரவு 7.15 மணிக்கு நேரில் ஆஜரானார். விசாரணையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட், அவரது தந்தையிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த 3-ம் தேதி வந்த இண்டிகோ விமானத்தில், பா.ஜ.க-வுக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதாக ஆராய்ச்சி மாணவி ஷோபியா மீது தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் புகார் அளித்தார். இதையடுத்து, புதுக்கோட்டை போலீஸார் அவரைக் கைது செய்தனர். அப்போது, காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில், ஷோபியாவின் பழைய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்கா விசாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், மாணவி ஷோபியாவின் புதிய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்குமாறு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி கந்தன் காலனியில் வசித்துவரும் அவரது தந்தை ஏ.ஏ.சாமிக்கு 7-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, மாணவி ஷோபியாவின் தந்தை ஏ.ஏ. சாமி, தனது வழக்கறிஞர்கள் அதிசயகுமார் மற்றும் சந்தனக்குமார் ஆகியோருடன் இன்று இரவு 7.15 மணியளவில் ஆஜராகினர். அவரிடம், காவல் ஆய்வாளர் திருமலை 20 நிமிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் வெளியே வந்த வழக்கறிஞர் அதிசயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஷோபியா கைதுசெய்யப்பட்ட கடந்த 3-ம் தேதி, முதல்கட்ட விசாரணையின்போது பறிமுதல் செய்த அவரின் பழைய பாஸ்போர்ட் மற்றும் அமெரிக்க விசாவை போலீஸார் எங்களிடம் திரும்பக் கொடுத்து விட்டனர். புதிய பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் சான்றொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளோம். எங்கள் தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாகவும் தெரிவித்துள்ளோம்.

பாஸ்போர்ட்டை யாரும் இதுவரை முடக்கவில்லை. அசல் பாஸ்போர்ட் எங்களிடம்தான் உள்ளது. மாணவி ஷோபியா, 2 மாத விடுப்பில்தான் தற்போது தூத்துக்குடி திரும்பியுள்ளார். அதன்பிறகு, கனடாவில் அவர் தனது கல்வியைத் தொடர்வார். பழைய பாஸ்போர்ட் மற்றும் விசாவை காவல் துறையினர் தங்களிடம் ஒப்படைத்துவிட்டதால், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவை திரும்பப்பெறுவோம்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசைசௌந்தரராஜன் மீது கொடுத்த புகார் மனு விசாரணை அதிகாரியின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதுகுறித்து சில நாள்களில் விசாரணை அதிகாரியிடம் தெரிவிப்போம். ஷோபியா நல்ல மனநிலையில் உள்ளார். அவருக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. அரசியல் கட்சிகள் ஆதரவாக இருப்பது ஷோபியா குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் நல்ல பயனைத் தரக்கூடியது; அதற்காகக் கடமைப்பட்டுள்ளோம். ஷோபியாவின் விமர்சனம் அரசியலாக்கப்படவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!