`மணல் கொள்ளையில் மாவட்ட நிர்வாகத்திற்கும் பங்கு இருக்கு' - கவர்னர் முன் கலெக்டரை அதிர வைத்த பா.ம.க நிர்வாகி!

"கடந்த 10 வருஷமா கரூர் காவிரியில் 36,000 கோடி வரை மணல் கொள்ளை நடந்திருக்கு. இந்த மெகா மணல் கொள்ளையில் கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, வருவாய்துறை என அத்தனை பேர்களுக்கும் பங்கிருக்கு" என்று கவர்னரிடம் பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் புகார் மனு கொடுத்த விவகாரம், அருகில் நின்ற கலெக்டர் அன்பழகனை நெளிய வைத்தது.

ஆளுநர் புரோஹித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாவட்டவாரியாக சென்று அரசுப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் அமைப்பு ஒன்றின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு மற்றும் ஆய்வு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். மாலை நான்கு மணிபோல் கரூர் சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கவர்னரிடம் பா.ம.க கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் ஒரு மனுவை கொடுத்தார். அந்த மனுவை ஏதோ, 'ரோடு சரியில்லை, வாய்க்கால் சரியில்லை' மனு என்று நினைத்த ஆளுநர் அதை அருகில் நின்ற மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் கொடுத்தார். 

உடனே, பாஸ்கரன், 'இது மணல் கொள்ளை சமம்ந்தப்பட்ட மனு. மணல் கொள்ளையில் அனைவருக்கும் இன்குளூடிங் கலெக்டருக்கும் சம்பந்தமிருக்கு' என்று சொல்ல, கலெக்டர் தலையை கவிழ்ந்துகொண்டார். உடனே அந்த மனுவை அவரிடம் இருந்து வாங்கிய கவர்னர், தனது உதவியாளரிடம் கொடுத்து அதன் சாராம்சத்தை கேட்டு தெரிந்துகொண்டார்.

அந்த மனுவில் இருந்த விசயத்தைக் கேட்டு, பாஸ்கரனின் கோரிக்கையையும் கேட்டு அதிர்ந்த ஆளுநர், 'பதினைந்து நாள்களில் நடவடிக்கை எடுக்க வைக்கிறேன்" என்று உத்தரவாதம் கொடுத்தார்.

ஆளுநரையும், கலெக்டரையும் அதிர வைக்கும் அளவிற்கு அந்த மனுவில் அப்படி என்னதான் இருக்கு? என்று பாஸ்கரனிடமே கேட்டோம். "கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரியில் கடந்த பத்து வருடங்களில் மட்டும் 36,000 கோடி அளவுக்கு மணல் கொள்ளை நடந்திருக்கு. ஆளுங்கட்சியை சேர்ந்த அனைவரும் இந்த மாபெரும் மணல் கொள்ளையை முன்னின்று நடத்தி இருக்கிறார்கள்.

இந்த மணல் கொள்ளைக்கு கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறைன்னு மூன்று தரப்பும் சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். அதனால், சேலம் டூ சென்னை ரயில் கொண்டு போன பழைய பணத்தாள்களை ஓட்டைப் போட்டு கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க காவல்துறை அமெரிக்காவில் உள்ள நாசாவில் இருந்து சேட்டிலைட் வீடியோவை வாங்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தினார்கள். 

அதுபோல, கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஆசியோடு நடைபெற்ற இந்த 36,000 கோடி அளவிலான மணல் கொள்ளையை அரங்கேற்றியவர்களை கண்டுபிடிக்க மத்திய அரசின் இஸ்ரோவிடம் சேட்டிலைட் வீடியோ பதிவுகளை வாங்க வேண்டும்.

அதோடு, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் இதற்காக விசாரணைக் குழு அமைத்து முறையான விசாரணை நடத்தி, மணல் கொள்ளையை அரங்கேற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறி மனு கொடுத்தேன். கவர்னரே ஒரு கணம் ஆடி போயிட்டார். அவர் சொன்னபடி 15 நாள்களில் நடவடிக்கை இல்லைன்னா, அன்புமணி அய்யாவை அழைத்து வந்து கடுமையான போராட்டம் நடத்துவோம்" என்றார் ஆக்ரோஷமாக!.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!