`தனியார் குடிநீர் நிறுவனத்தில் சிக்கிய கள்ள நோட்டுகள்' - பழிவாங்கப் பதுக்கி வைக்கப்பட்டதா?

ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையில் தனியாருக்குச் சொந்தமான மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் கள்ள நோட்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ள நோட்டுகள்


ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசை என்ற ஊரில் தனியாருக்கு சொந்தமான மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கள்ள நோட்டுகள் இருப்பதாகவும், போதைப் பொருட்கள் இலங்கைக்குக் கடத்த பதுக்கி வைத்து இருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஒரே செல்போன் எண்ணிலிருந்து பலமுறை இத்தகவல் போலீஸாருக்கு வந்ததையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென சோதனையிட்டனர். அங்கு 200 ரூபாய் நோட்டுகள் 67, 100 ரூபாய் நோட்டுகள் 59, 500 ரூபாய் நோட்டுகள் 70 உட்பட மொத்தம் ரூ.54 ஆயிரத்து 300 மதிப்புடைய கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்நிறுவனத்தில் ஒரு கிலோ எடையுள்ள 3 போதைப்பொருள் பாக்கெட்டுகளும் இருந்தன.
 
இது குறித்து போலீஸார் அந்த நிறுவனத்திலிருந்த சிலரிடம் நடத்திய விசாரணையின் போது, மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் ராமநாதபுரம் அருகே உள்ள நொச்சியூரணி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன்களான சிவசங்கரன்(25), சிவகாந்தன்(23) ஆகியோருக்குச் சொந்தமானது என்றும் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தவர்களிடம் காலிசெய்யுமாறு கூறியுள்ளனர். பலமுறை சொல்லியும் காலி செய்யாததால்  எப்படியாவது குடிநீர் தயாரிப்பு நிறுவனத்தை காலி செய்து விடும் நோக்கத்தில் கள்ள நோட்டுகளையும், போதைப் பாக்கெட்டுகளையும் வைத்திருக்கக் கூடும் எனத் தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து குடிநீர் நிறுவன உரிமையாளர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்த போது, ``கள்ள நோட்டுகள் எப்படி வந்தன எனத் தெரியவில்லை. இதன் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என விசாரணை செய்து வருகிறோம். போதைப் பாக்கெட்டுகள் 3 இருந்தன. இவை உண்மையில் போதைப்பொருள் தானா எனத் தெரியவில்லை. போலியானதாகவும் இருக்கலாம். வேண்டும் என்றே வெள்ளை நிறப்பவுடரை தயாரித்து அந்த நிறுவனத்துக்குள் வைத்திருக்கலாம் எனவும் தோன்றுகிறது. இருப்பினும் இவை போதை பொருள்தானா என்பது பரிசோதனை முடிவு வந்த பிறகே தெரியும். கள்ள நோட்டுகள் மொத்தம் ரூ.54,300 மற்றும் போதைப் பொருள் இருந்த 3 பைகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!