" நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்... ஆனாலும் அவளுக்கு மஞ்சள், குங்குமம் வச்சேன்!" கலங்கும் டிராஃபிக் ராமசாமி | Traffic Ramaswamy talks about his assistant Fathima!

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (08/09/2018)

கடைசி தொடர்பு:08:14 (09/09/2018)

" நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்... ஆனாலும் அவளுக்கு மஞ்சள், குங்குமம் வச்சேன்!" கலங்கும் டிராஃபிக் ராமசாமி

எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும், ஃபாத்திமா நல்லபடியா குணமாகணும்னு ஸ்ரீரங்கம் கோயிலில் வேண்டிக்கிட்டு, மஞ்சள், குங்குமத்தை வெச்சுவிட்டேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உயிர் போயிருச்சு.

டிராஃபிக் ராமசாமி

சென்னை, பாரிஸ் கார்னரில் இருக்கும் டிராஃபிக் ராமசாமி அலுவலகத்தின் முதல் மற்றும் இரண்டாவது அறைகளில், அவரின் புகைப்படங்கள் வரிசையாக உள்ளன. அனைத்திலும் அவருக்கு அருகே ஃபாத்திமாவும் இருக்கிறார். டிராஃபிக் ராமசாமி மேடையில் பாராட்டப்படும்போதும், போராட்டக்களத்தில் குரல் கொடுக்கும்போதும், அவருடன் நிழல்போல பக்கபலமாக நின்றவர், ஃபாத்திமா. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமடைந்த செய்தி கேட்டு அப்போதே டிராஃபிக் ராமசாமியை தொலைபேசியில் அழைத்தபோது, “ரெண்டு நாளைக்குப் போன் பண்ணாதீங்க. நான் ஃபாத்திமாவுக்கு செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்கு. முடிச்சுட்டு சென்னைக்கு வந்ததும் நேர்ல பேசலாம்” எனச் சொல்லியிருந்தார்.

நேற்று தொலைபேசியில் அழைத்தவர், “சென்னையிலதான் இருக்கேன். நேர்ல வாங்க பேசலாம்” என்றார். அவர் அலுவலகத்தின் முதல் இரண்டு அறைகளைத் தாண்டி மூன்றாவது அறைக்குள் நுழைந்தோம். நாற்காலியில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவரின் கைகளைப் பற்றி ஆறுதல் சொன்னதும், பெருக்கெடுத்தது கண்ணீர்.

“ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் என்னை விட்டுட்டுப் போனா. இதுக்கு முன்னாடியும் பலமுறை கோபப்பட்டு போயிருக்கா. கொஞ்ச நாளில் திரும்பி வந்துருவா. இந்த முறை திரும்பி வரமுடியாத இடத்துக்குப் போயிட்டாளே. இந்த இழப்பை எப்படிச் சரி செய்யப்போறேன். அப்பாவும் கணவரும் உசுரோடு இருந்தும், 'ஃபாத்திமா, கேர் ஆஃப்  டிராஃபிக் ராமசாமி'னு போட்டுக்கிட்டா. எந்தப் பொண்ணு இப்படித் துணிச்சலா ஒரு முடிவை எடுக்கும். எத்தனை முறை அடிச்சிருக்கேன், எட்டி உதைச்சிருக்கேன். மயங்கி விழுந்தாலும் பொறுத்துக்கிட்டு, 'இந்தச் சமூகத்துக்காக நீங்க உழைக்கறீங்க. உங்ககிட்ட அடியும் மிதியும் படறதில் கஷ்டம் இல்லை'னு சொன்னவள். இப்போ, என்னைத் தனியா நிக்கவிட்டுப் போயிட்டாளே” எனக் கதறுகிறார்.

பாத்திமாவுடன் டிராஃபிக் ராமசாமி

அவரை ஆசுவாசப்படுத்தி, 'ஃபாத்திமா பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்' என்றதும், “அவள் பேரு ஃபாத்திமாவே இல்லே. பாரதி. கும்பகோணம் பக்கத்தில் உமையாள்புரம்தான் சொந்த ஊரு. அப்பா பேரு ராமமூர்த்தி. இந்தச் சமூகத்துக்கும் காவல்துறைக்கும் பயந்து, ஃபாத்திமான்னு மாத்திக்கிட்டா. ஆறு வருஷத்துக்கு முன்னாடி, கும்பகோணத்தில் துணி நிறுவனம் நடத்திட்டிருந்தவள். பில்டிங் ஓனரோடு ஏற்பட்ட தகராறில் ஊரைவிட்டு சென்னைக்கு வந்திருக்கா. 2014-வது வருஷம்னு நினைக்கிறேன். நியூஸ் பேப்பர்ல என்னைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டு, விசாரிச்சு வந்தாள். என்கிட்ட வந்த அன்னைக்குதான் கும்பகோணத்தில் இருந்த கம்பெனியை அடிச்சு நொறுக்கியிருக்காங்க. ரொம்ப கலங்கிப் போயிருந்தவளுக்கு ஆறுதல் சொல்லி என்னோடு தங்க வெச்சேன். 

பாரதி ரொம்ப பாவம். சொந்தத்தில் கல்யாணம் முடிச்சிருக்காங்க. ஒரு பொண்ணும் பையனும் பிறந்ததும், அவரு வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரம். ரொம்ப கஷ்டப்பட்டு தன் பொண்ண வளர்த்து, கல்யாணம் பண்ணிக்கொடுத்தாள். பையன் யாரையோ காதலிக்கிறதா சொல்லிட்டிருந்தா. அவனுக்கு கல்யாணம் பண்ணிவைக்காமலே போயிட்டா. இனி நான்தான் தலையிட்டு அவனுக்கு நல்லது பண்ணிவைக்கணும்னும்” என அமைதியாகிறார்.

பாத்திமாவுக்கு விபத்து ஏற்பட்டபோது அருகில் டிராஃபிக் ராமசாமி

''ஃபாத்திமா இறந்த செய்தி உங்களுக்கு எப்போது கிடைத்தது?'' 

“27-ம் தேதி, மணப்பாறைக்கு ஒரு வேலையா போயிருந்தவளுக்கு திடீர்னு நெஞ்சுவலி வந்திருக்கு. அப்போவே எனக்குத் தகவல் கொடுத்துட்டாங்க. உடனே, திருச்சி அப்போலோ ஆஸ்பத்திரியில் பேசி வெச்சிருந்தேன். ஆனால், அவங்க வேற ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டாங்க. நான் உடனே கிளம்பிப் போனேன். ஹார்ட் அட்டாக். புதன்கிழமை ஓப்பன் ஹார்ட் சர்ஜெரி பண்ணனும்னு டாக்டர்ஸ் சொன்னப்பவும், 'எனக்கு நம்பிக்கை இருக்கு. சீக்கிரமே உங்ககிட்ட திரும்பி வந்திடுவேன்'னு சொன்னாள். ஆபரேஷன் முடிஞ்சு மூணு நாள் நினைவு திரும்பவே இல்லே. எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும், ஃபாத்திமா நல்லபடியா குணமாகணும்னு ஸ்ரீரங்கம் கோயிலில் வேண்டிக்கிட்டு, மஞ்சள், குங்குமத்தை வெச்சுவிட்டேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உயிர் போயிருச்சு. நான் கடைசியா அவளுக்கு செஞ்ச உருப்படியான விஷயம், மஞ்சள், குங்குமம் வெச்சுவிட்டது, உறவினர்கள் எல்லோரையும் வரவெச்சு இறுதிச் சடங்கு பண்ணினேன். அவங்க சம்பிரதாயப்படியே எல்லா காரியங்களையும் செஞ்சேன். அவள் தங்கியிருந்த அறையை மெமொரியல் ஆக்கி உருவச்சிலை வெக்கப்போறேன்.”

''ஃபாத்திமாவையும் உங்களையும் தவறாக பேசுபவர்கள் பற்றி...''

“கணவன், மனைவி மாதிரி நாங்க வாழ்ந்துட்டிருந்ததா சொல்லிட்டிருந்தாங்க. இப்பவும் சொல்றாங்க. என் மனசாட்சிக்குத் தெரியும் நாங்க எப்படின்னு. 2015-ம் வருஷம் அவளுக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆச்சு. அப்போ நான்தான் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டேன். அப்பவும் என் மனசுல எந்தக் களங்கமும் வந்ததில்லை. அவளை என் மாணவியா பார்க்கிறேன். இந்த வயசுக்கு அப்புறம், இந்த மாதிரியான பேச்சை கேட்கவேண்டியிருக்கேனு வேதனையா இருக்கு. ஒரு விஷயம் சொல்றேன். ஒருவேளை எங்களுக்கு அதுமாதிரியான தேவை இருந்திருந்தாலும் தப்பில்லை. எந்த ஒண்ணையும் கட்டாயப்படுத்தினாதானே தப்பு.

வேம்புவுடன் டிராஃபிக் ராமசாமி

இதோ, இங்கே நிற்கிறாளே, இவள் பேரு, வேம்பு. ஃபாத்திமா இறந்த செய்தி கேட்டு அடுத்த நாளே என்னைத் தேடிவந்துட்டா. ஃபாத்திமாவோடு இருந்தவள். அவளோட ஒவ்வொரு மூவ்மென்ட்டும் வேம்புவுக்குத் தெரியும். முன்னாடி அடிக்கடி வந்து ஏதாவது உதவிகளைச் செய்தவள். இப்போ இங்கேயே தங்கிடறதா சொல்றா. ஃபாத்திமா கவனத்திலிருந்த வழக்குகளை எல்லாம் இனி இவள் பண்றதா சொல்லியிருக்கா. நானா யாரையும் அழைக்கலை. அவங்களே விருப்பப்பட்டு வர்றாங்க. அப்படித்தான் ஃபாத்திமாவும் வந்தாள். சமூகத்துக்கு ஏதோ ஒரு வகையில சேவை செஞ்சா. இப்போ வேம்பு. 'சரி வா'னு அவள் கையில் பொறுப்பைக் கொடுத்திருக்கேன். ஊரு என்ன நினைக்கும்; உலகம் என்ன சொல்லும்னு எனக்குக் கவலையில்லை” என்கிறார் டிராஃபிக் ராமசாமி தெளிவான குரலில். 


டிரெண்டிங் @ விகடன்