`தேசிய பந்த்’ -ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோவும் ஆதரவு! #PetrolPriceHike | mdmk will participate in all India strike organised by congress party, says vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (08/09/2018)

கடைசி தொடர்பு:11:38 (08/09/2018)

`தேசிய பந்த்’ -ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோவும் ஆதரவு! #PetrolPriceHike

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அகில இந்திய அளவில் நடக்க உள்ள பொது வேலை நிறுத்தத்துக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.

வைகோ

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு, அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் லாரி உரிமையாளர்கள், பொதுத் துறையினர் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், விலையேற்றத்தைக் கண்டித்து அகில இந்திய அளவில் நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க பங்கேற்கும் என வைகோ அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த நான்கரை ஆண்டுகளாக பெட்ரோலியப் பொருள்களின் விலை விண்ணைத் தொடும் வகையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 16 நாள்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு, பெட்ரோல் விலை ரூ.84.62 ஆகவும், டீசல் விலை ரூ.75.48 ஆகவும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதை பா.ஜ.க. அரசு காரணம் கூறுவதை ஏற்கவே முடியாது. ஏனெனில், 2014 மே மாதம் மோடி அரசு பொறுப்பேற்ற நேரத்தில், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.05 டாலர் ஆக இருந்தது. தற்போது, கச்சா எண்ணெய் விலை 85 டாலர் அளவில்தான் உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக உயர்த்தியதுதான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதை மறைக்க முயல்கிறது.

2014 மே மாதம், பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20, டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.3.46 தற்போது 2018 செப்டம்பரில் பெட்ரோல்மீது உற்பத்தி வரி ரூ.19.48, டீசல் மீதான உற்பத்தி வரி ரூ.15.33 அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மோடி அரசு பதவி ஏற்றபின்னர், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் மூலம் மட்டுமே சுமார் 11 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியிருக்கிறது. இது, வரலாறு காணாத பகல் கொள்ளை அல்லவா?

தமிழக அரசும் தனது பங்குக்கு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை பெட்ரோலுக்கு ரூ.34, டீசலுக்கு ரூ.25 என்று உயர்த்திவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவதால், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துவருகிறது. இதனால் விலைவாசி உயர்வும் மக்களை வாட்டிவதைக்கிறது.

இந்நிலையில், செப்டம்பர் 10-ம் தேதி இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பொதுவேலை நிறுத்தத்தில் ம.தி.மு.க ஆதரவு வழங்குகிறது. இந்த வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டின் வணிகப் பெருமக்களும், அரசு ஊழியர்கள், தொழிலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இந்த முழு அடைப்புக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.