வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (08/09/2018)

கடைசி தொடர்பு:12:34 (08/09/2018)

தன்னம்பிக்கையால் விளைந்த காய்கறிகள்! -முதியவர்களின் அறுவடைத் திருவிழா

நெல்லையில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள், தங்களின் தேவைக்காக அந்த வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர். அதில் காய்கறிகள் விளைந்துள்ளதால், அவற்றை அறுவடைத் திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

அறுவடைத் திருவிழா - காய்கறிகள்

நெல்லை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான முதியோர்கள் கைவிடப்பட்ட நிலையில், சாலையோரங்களிலும் மரநிழல்களிலும், ஆற்றோர மண்டபங்களிலும் வசித்துவந்தார்கள். அவர்களில் பலருக்கு குடும்பம், உறவினர்கள் என இருந்தபோதிலும் அனைவராலும் கைவிடப்பட்டதால், யாருமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய நபர்களுக்கு உதவும் வகையில், நெல்லை மாநகராட்சி சார்பாகக் கண்டியபேரி மற்றும் குறுக்குத்துறை ஆகிய இரு இடங்களில் ஆதவற்றோர் இல்லம் ஆரம்பிக்கபட்டன. 

கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, குறுக்குத்துறையில் செயல்படத் தொடங்கிய இல்லத்தில், தற்போது 40 முதியவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுகிறது. அங்கு தங்கியுள்ளவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக, 'சோயா' தொண்டு நிறுவன ஊழியர்கள் வந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் அவ்வப்போது வருகைதந்து பிஸ்கட், அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்குகிறார்கள். தொலைக்காட்சிப்பெட்டி இருப்பதால் நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்கிறார்கள். 

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியோரில் பலரிடம் பல்வேறு விதமான கைத்தொழில்கள் உள்ளன. ஓய்வு நேரத்தில் அவர்கள் அவற்றைச் செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செல்விடும் வகையில் அவர்களாகவே வளாகத்தைச் சுற்றிலும் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளனர். அதில், கத்திரி, தக்காளி, வெண்டை, வெங்காயம், கீரைவகைகள் உள்ளிட்ட காயகறிகளைப் பயிரிட்டுள்ளனர். 

சுமார் இரண்டு மாதமாக அவற்றை பாசத்துடன் பராமரித்த முதியோர், வளர்ந்த செடிகளில் காய்கறிகள் விளைந்ததும் பறிக்கத் தொடங்கினார்கள். முதல் நாளில் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளைப் பறித்ததை அறுவடைத் திருநாள் போல கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்காக, சிறப்பான பாயசம் செய்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தார்கள். தாங்களே வளர்த்த காய்கறிச் செடிகள் நன்கு வளர்ந்திருப்பதால், இனி கடைகளுக்குச் சென்று காய்கறி வாங்கவேண்டிய அவசியம் இருக்காது என அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுபற்றி முதியோர் இல்லத்தைப் பராமரித்துவரும் முன்னாள் கவுன்சிலரான ’சோயா’ சரவணன் கூறுகையில், ’’இங்குள்ள பலருக்கும் சொந்தங்கள் இருந்தபோதிலும், அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களை இந்த இல்லத்தில் பராமரிக்கிறோம். இந்த முதியோர்கள் வெளியே தங்கியிருந்தபோது, அவர்கள் பிறரிடம் கையேந்தி சேகரித்த பணத்தை ரவுடிகளும் சமூக விரோதிகளும் பறித்துக்கொண்டனர். 

அதனால் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்த முதியோர், தற்போது இந்த இல்லத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, அவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கினோம். வங்கிக் கணக்குகள் தொடங்கவும் உதவி செய்திருக்கிறோம். இப்போது, அவர்களாகவே காய்கறித் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். வாழும் காலம் வரை அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது மட்டுமே எங்களின் நோக்கம். இதனால், அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொதுமக்களின் பங்களிப்புடன் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்வோம்’’ என்று தெரிவித்தார்.