வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (08/09/2018)

கடைசி தொடர்பு:15:40 (08/09/2018)

`நதி அனைவருக்கும் பொதுவானது..! ’ - தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் போர்க்கொடி!

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான தாமிரபரணி நதியை குறிப்பிட்ட மதத்துக்குச் சொந்தமானதாக உருவாக்கும் வகையில், புஷ்கரம் என்கிற வடநாட்டு விழாவை தமிழகத்தில் திணிக்க முயற்சி நடக்கிறது. அதனால், தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புஷ்கரம் எதிர்ப்பு - கே.பாலகிருஷ்ணன்

இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ’’நாடு முழுவதும் குழந்தை கடத்தல், பசு கடத்தல் என்கிற பெயரில் சில கும்பல்கள் அப்பாவி மக்களைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்திவருகின்றனர். உச்ச நீதிமன்றமே அதைக் கண்டித்தபோதிலும் தொடர்ந்து அத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. இதுவரை 47 பேர் கும்பல்களால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய சம்பவங்களையும் தலித்துகள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்துக் கேட்கும் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களைக் கைதுசெய்து, அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி, 10-ம் தேதி நடக்க உள்ள நாடுதழுவிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்கும். தாமிரபரணி நதியில் புஷ்கரம் என்கிற பெயரில் வடநாட்டு விழாவை நடத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரை, அனைத்துக் கட்சி சார்பாக சந்தித்து வலியுறுத்தினோம். நதி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் அங்கு சாதுக்கள், துறவிகளை அழைத்துவந்து 12 நாள்களுக்கு விழா என்கிற பெயரில் குறிப்பிட்ட மதத்துக்குச் சொந்தமாக்க முயற்சி நடக்கிறது. 

இந்த விழா நடத்துவது தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரானது. இந்த விழாவில் பங்கேற்று குளிப்பவர்கள், துணிகளை நதியில்  போட்டுவிடுவார்கள். அதனால், டன் கணக்கில் துணிகள் சேர்ந்து ஆறு மாசுபடும். சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி சீர்கேடு அடைவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அதனால், அந்த விழாவை நடத்த அனுமதிக்கக் கூடாது. 

அ.தி.மு.க அரசில் ஊழல் நிறைந்து கிடக்கிறது. விஜயபாஸ்கர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்த பின்னரும், அவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலுமணி மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தன்னால் ஊழல் செய்ய முடியாது என்பதற்காகவே தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுவருகிறார்.  குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அளவுக்கு ஊழல் உள்ளது. குட்கா ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 27 வருடங்களாக சிறையில் இருப்பவர்களை தமிழக அரசே விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்த உடனேயே அமைச்சரவையைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால், தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாளைக்கு அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கிறது. அதிலும் காலதாமதம் செய்யாமல், உடனே 7 பேரையும் விடுவிக்க பரிந்துரைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க