"ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்கும் என நம்புகிறேன்" வழக்கறிஞர் அங்கையற்கண்ணி | advocate angayarkanni talks about the release of seven convicts in rajiv gandhi murder case

வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (08/09/2018)

கடைசி தொடர்பு:10:02 (10/09/2018)

"ஏழு பேரையும் தமிழக அரசு விடுவிக்கும் என நம்புகிறேன்" வழக்கறிஞர் அங்கையற்கண்ணி

"இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரும் நீண்ட காலம் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். மாநில அரசு நினைத்தால், ஒரே நாளில் 7 பேரையும் விடுவிக்கும் முயற்சியை எடுக்க முடியும். எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்!" - வழக்கறிஞர் அங்கையற்கண்ணி

ஏழு பேர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை முடிவுசெய்யும் அதிகாரம், தமிழ்நாடு அரசுக்கு உள்ளதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை வரவேற்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனை ஆணையை ரத்துசெய்யக் கோரி, 2011-ம் ஆண்டில், அங்கயற்கண்ணி, வடிவாம்பாள், சுஜாதா ஆகிய மூன்று பெண் வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, தற்போதைய சூழல் பற்றிப் பேசினார்.

 ''2011-ம் செப்டம்பரில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ளவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்ற ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து, மூன்று பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அப்போதும் இறக்கப்பட்டு தண்டனையைக் குறைக்குமாறு கோரவில்லை. இந்திய அரசின் சட்ட விதிகளின்படி நீதிவேண்டியே எங்களின் போராட்டம் அமைந்திருந்தது. நான்காம் நாளில், காஞ்சிபுரத்தில் செங்கொடி, தூக்குத் தண்டனை நிறைவேற்றக்கூடாது எனத் தீக்குளித்தார். இந்தியக் குற்றவியல் சட்டம் 432, 433 பிரிவின்படி, மாநில அரசுக்குத் தூக்குத் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் இருக்கிறது என வலியுறுத்தினோம். தமிழ்நாட்டுச் சட்டமன்றமும் ஒருமனதாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், வழக்குத்தாரரான சிபிஐ மத்திய அரசுக்குக் கீழ் வருவதால், மாநில அரசு தண்டனையைக் குறைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் சென்றது. இதனால், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைத் தடைசெய்து, சிபிஐ-யின் வழக்கை நிலுவையில் வைத்தது.  ஐந்தாம் நாள் உண்ணாவிரதம் நீடித்தது. வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆணைக்குத் தடை வாங்கினார். அப்போது சிபிஐ தொடுத்திருந்த வழக்கில்தான், இப்போது உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்குக் சட்ட விதி 432 மற்றும் 433-ன் கீழ் தண்டையைக் குறைக்கும் அதிகாரம் உள்ளது எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இது, இந்தியா முழுமைக்குமான முன்மாதிரி தீர்ப்பு.

தமிழ்நாடு அரசு இப்போது செய்யவேண்டியது, ஏற்கெனவே நிறைவேற்றியிருந்த தீர்மானம் அல்லது புதிய தீர்மானம் ஒன்றை இப்போது நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அதனை நிறைவேற்றக் குறிப்பிட்ட காலம்கூட எடுக்கவேண்டியதில்லை. ஏனெனில், புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு அனுமதிப்பதுபோல அல்ல இது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்தைச் செயல்படுத்தப் போகிறோம். ஏனெனில், இந்த வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரும் நீண்ட காலம் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். மாநில அரசு நினைத்தால், ஒரே நாளில் 7 பேரையும் விடுவிக்கும் முயற்சியை எடுக்க முடியும். எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

அற்புதம்மாள்

தமிழ்நாடு அமைச்சர் ஒருவர், இந்தத் தீர்ப்புக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்மானத்தை ஆளுநர் நிராகரிக்க முடியாது. ஏனென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுபெற்ற தீர்மானம் இது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமே வழங்கியிருப்பதால், அதைவிடவும் அதிகாரம் அமைந்தது ஏதுமில்லை. அதனால், சட்டப்படியும் மனிதாபிமான ரீதியாகவும் 7 பேரின் விடுவிப்புக்குத் தடை ஏதுமில்லை. இதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து நிற்கவேண்டிய காலகட்டம் இது.

அற்புதம்மாவின் தொடர் போராட்டம் மிகவும் முக்கியமானது. ஒரு நபர், ஒரு விஷயத்தை நோக்கி துளியும் சோர்ந்துவிடாமல் போராடிவருகிறார் என்றால், உலகிலேயே இவராகத்தான் இருக்க முடியும். அவரின் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வேண்டும். பேரறிவாளனோடு சேர்ந்து 7 பேரின் விடுதலையும் முக்கியமானது. இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு அவர்களை விடுவித்தால், அது இந்திய அரசியலில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமையும். செய்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன்" என்றார் அங்கயற்கண்ணி. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close