வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/09/2018)

கடைசி தொடர்பு:16:00 (08/09/2018)

`’நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்பவில்லை” - ஐஜி., ரூபா காட்டம்!

ரூபா

``நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை. இடம் மாறுதல்கள் நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளைத் தடுக்கிறது” என கர்நாடக மாநில ஐஜி.,ரூபா கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்,  ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கர்நாடக மாநில ஐஜி.,ரூபா, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, "ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மாணவர்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஊழல் தொடர்பாக அரசிடமும் அரசியல்வாதிகளிடம்  மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அப்போதுதான் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும்” என்றார்

தமிழக காவல்துறை தலைவர் மீதான சிபிஐ நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும், ``சிறையில் சசிகலா தொடர்பான விஷயங்களில் எனது பணியை மட்டும்தான் செய்தேன். அதற்காக,  'மன்னார்குடி மாஃபியாவும் தமிழ்நாடு அரசும் உங்களை சும்மா விடாது' என்று கூட பலர் மிரட்டினார்கள்.  அதற்கெல்லாம் துளியும் நான் அஞ்சவில்லை. சசிகாலா சிறையில் இருந்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக தற்போது உள்ள அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவில் அறிக்கை சமர்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விளக்கம் கேட்டு நான் ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்டதற்கு, எனக்கு தகவல் அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக, தகவல் தொடர்பு ஆணையத்தை அணுக உள்ளேன். ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டால், அதிகாரிகள் தகவல் அளிப்பது கிடையாது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்” என்றவர்,

``சமூக மாற்றத்துக்கு நேர்மையான அதிகாரிகள் தேவை. ஆனால் அரசுகளோ, நேர்மையான அதிகாரிகளை  விரும்புவதில்லை. இடம் மாறுதல்களே நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளைத் தடுக்கிறது. குறைந்தபட்சம் இடமாறுதல் வழங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால அளவை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.