மூன்று நாள்கள்...குட்கா சிக்கலில் காக்கிகள் - துணை கமிஷனர் விமலாவின் சீக்ரெட் ரிப்போர்ட்!

குட்கா ஊழல் தொடர்பாக,  துணை கமிஷனர் விமலா கொடுத்த சீக்ரெட் ரிப்போர்ட் அடிப்படையில், வழக்கில் தொடர்புடைய  காவல் அதிகாரிகளிடம்  விரைவில் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. 

குட்கா பிரஸ்மீட்டில் ஜார்ஜ்

குட்கா ஊழல் நடந்தது உண்மை என்று முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று பிரஸ் மீட்டில் தெரிவித்துள்ளார்.அதோடு, சில போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகின்றனர்.  குட்கா ஊழல் தொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உட்பட, 35 இடங்களில் சிபிஐ சோதனை நடந்தது. சோதனைக்குப் பிறகு குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர், அதிகாரிகள் செந்தில்முருகன், பாண்டியன் உள்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். தரகர்களாகச் செயல்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். 

 இந்த நிலையில், குட்கா விவகாரத்தில் சிபிஐ பதிவுசெய்த எஃப்ஐஆரில், 17 பெயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதில்,  21.04.16, 20.05.16, 20.06.16 ஆகிய மூன்று தினங்களில் பணம் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால்தான் ஜார்ஜ், பணம் கொடுக்கப்பட்ட தினங்களில் நான் கமிஷனராக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் அடிப்பட்டதால், அப்போது கமிஷனராக இருந்த ஜார்ஜ், அரசுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், சில முக்கியத் தகவல்களை அவர் குறிப்பிட்டிருந்தார். கடிதம் எழுதுவதற்கு முன்பு நுண்ணறிவுப் பிரிவு துணை கமிஷனராக இருந்துவரும் விமலாவிடம் ரிப்போர்ட் ஒன்றை ஜார்ஜ் பெற்றுள்ளார். அந்த ரிப்போர்ட்டில்,  விமலா கூறிய தகவல்கள்தான் குட்கா வழக்கிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  

குட்கா விவகாரத்தில் சிக்கியவர்கள்

 ``2015-ம் ஆண்டு டிசம்பர் 28ல், நுண்ணறிவுப் பிரிவு துணை கமிஷனராக நான் பொறுப்பேற்றேன். அதற்குமுன்,  மாதவரம் துணை கமிஷனராகப் பணியாற்றினேன். கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 8 ம் தேதி,  மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் கொடுத்த தகவலையடுத்து,  செங்குன்றம் தீர்த்தாங்கரயப்பட்டு என்ற இடத்தில் செயல்பட்ட குட்கா குடோனில்  சோதனை செய்தோம். அங்கிருந்து, பான் மசாலா குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தோம். அப்போது, புழல் உதவி கமிஷனராக மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் இருந்தனர். மேலும், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக இருந்த ஜெயக்குமாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமாருக்கும் தகவல் தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

சிபிஐ-யின் சந்தேக வளையத்தில் இந்தக் காவல்துறை அதிகாரிகள் இருந்துவருகின்றனர். இந்த நிலையில்தான் மேலும் சிலரின் பெயர்களை ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மாதவரத்தில் விமலா துணை கமிஷனராக இருந்தபோது, தாமரைக்கண்ணன், ஆபாஷ் குமார், ரவி குமார், கருணாசாகர், சேஷசாயி, ஸ்ரீதர் ஆகியோர் கூடுதல் கமிஷனர்களாக இருந்துள்ளனர். மேலும் செந்தாமரைகண்ணன், சங்கர், ஸ்ரீதர், தினகரன், ஜோஷி நிர்மல் குமார் ஆகியோர், வடக்கு இணை கமிஷனர்களாக  இருந்துள்ளனர். ராஜேந்திரன், லஷ்மி, புகழேந்தி, ராமகிருஷ்ணன் ஆகியோர் துணை கமிஷனர்களாக இருந்துள்ளனர். கந்தசாமி, மன்னர்மன்னன், ஆறுமுகம், லிங்கதிருமாறன் ஆகியோர் உதவி கமிஷனர்களாக இருந்தனர். ஜார்ஜ், திரிபாதி, டி.கே.ராஜேந்திரன், சுக்லா ஆகியோர் கமிஷனர்களாக இருந்தனர். ஆனால், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் மட்டும்தான் மாதவ ராவின் டைரியில் உள்ளன. சிபிஐ குட்கா வழக்கில் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினாலும், அந்தக் காலகட்டத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்பதே சிபிஐ-யின் கேள்வியாக உள்ளது. அதற்கு விடைதேட சிபிஐ, சில போலீஸ் அதிகாரிகளிடம்  விசாரணை நடத்த உள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!