வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (08/09/2018)

கடைசி தொடர்பு:17:20 (08/09/2018)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.  அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர் பக்தர்கள்.

 

திருச்செந்தூர் தேர்த் திருவிழா

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 30 -ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகக் கடந்த 3-ம் தேதி இரவு 7.30 மணிக்கு, சிவன் கோயிலில்  குடவருவாயில் தீபாராதனை  நடைபெற்றது. 7-ம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு, உருகுசட்ட சேவையும், 9-மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி அலங்காரத்தில்  எழுந்தருளி வீதியுலாவருதலும்  நடைபெற்றது. 

8-ம் நாள் திருவிழாவான 6-ம் தேதி காலை 5 மணிக்கு, சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச்சப்பரத்திலும்,  காலை 10.30 மணிக்கு பச்சை  சாத்தி  அலங்காரத்திலும் எழுந்தருளி வீதியுலா  வருதலும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம்  நாள் திருவிழாவான இன்று (8.9.18)  காலை நடைபெற்றது.

விநாயகர், குமரவிடங்கப் பெருமாள், வள்ளி தனித்தனி தேர்களில் வலம் வந்தனர். முதலில், விநாயகர் எழுந்தருளிய தேரும் இரண்டாவதாக சுவாமி குமரவிடங்கப் பெருமாள் எழுந்தருளிய தேரும், மூன்றாவதாக வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரும் ரத வீதிகளில் வலம்வந்து நிலையத்தை அடைந்தது. பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.                                                             12 -ம் நாள் நிகழ்ச்சியுடன் வரும் 10-ம் தேதி திருவிழா நிறைவுபெறும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க