மீத்தேன் திட்டத்தை மறைமுகமாக ஆதரிக்கிறதா அரசு? - கொதிக்கும் போராட்டக்காரர்கள்! | Don't give permission to flex hoardings of ONGC urges activists

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (08/09/2018)

கடைசி தொடர்பு:17:40 (08/09/2018)

மீத்தேன் திட்டத்தை மறைமுகமாக ஆதரிக்கிறதா அரசு? - கொதிக்கும் போராட்டக்காரர்கள்!

'ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும்' என டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. மேலும், ஓஎன்ஜிசி மீத்தேன் எடுப்பதற்கும் மத்திய அரசிடம் தற்போது அனுமதி பெற்றுள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூரில் ஓஎன்ஜிசி-யின் சாதனைகள் எனக் கூறி, அந்த நிறுவனம் ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைத்துள்ளது. இது, மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்களைக் கடுமையாகக் கொந்தளிக்கவைத்துள்ளது. இதற்கு அனுமதி கொடுத்த தமிழக  அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்துவரும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் புற்றுநோய், தோல் நோய் உள்ளிட்ட பலவித நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், மறைமுகமாக  மீத்தேன் எடுப்பதற்கான செயல்களிலும் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுவந்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, ஓஎன்ஜிசி  நிறுவனம் முற்றிலுமாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை மக்கள் நடத்திவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், தஞ்சாவூரில் ஓஎன்ஜிசி நிறுவனம் தங்களின் சாதனைகளை ஃப்ளெக்ஸ் அமைத்து விளம்பரம் செய்துள்ளது.

ஓஎன்ஜிசி-க்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், அந்த நிறுவனம் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய கோயில்களின் விழாக்கள் என அனைத்து இடங்களிலும் மக்களுக்கான சக்தி, தேசத்தின் வலிமை என மக்களுக்கு பல நல்ல செயல்கள் செய்வது போன்ற  தோற்றத்தை உருவாக்கும் வகையில் ஃப்ளெக்ஸ் வைத்து விளம்பரம்செய்யத் தொடங்கின. கடந்த ஆண்டு, பெரிய கோயிலில் நடைபெற்ற சதயவிழாவுக்கு ரூ.7 லட்சம் நன்கொடையாகக் கொடுத்தது. இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இப்போது, அந்த நிறுவனத்தின் சாதனைகள் எனக் கூறி ஃப்ளெக்ஸ் வைத்துவருகின்றனர். குறிப்பாக,  தஞ்சாவூர் நகரப் பகுதியில் மருத்துவக் கல்லூரி சாலையில் ஓஎன்ஜிசி நிறுவனம், விவசாயத்திற்கு உரம் தயாரிக்கவும், மருத்துவ சக்திக்கு, சமையல் எரிவாயு தயாரிக்க என பல வகையில் ஓஎன்ஜிசி உதவுவதாகவும், அதன் சாதனைகளாகவும் நூற்றுக்கணக்கான ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து விளம்பரம் செய்துள்ளனர். இவைதான், ஓஎன்ஜிசி மற்றும் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராடி வருபவர்கள் மற்றும் பொதுமக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும், இதற்கு அரசு அனுமதிதந்து எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதாகவும்  அவர்கள் தெரிவிக்கிறார்கள். 

இதுகுறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் பேசினோம்.  ``காரைக்காலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். 1984-ம் ஆண்டு முதல் எண்ணெய் எரிவாயு எடுக்கிறேன் என்கிற பெயரில் டெல்டா மாவட்டத்தின் வளங்களை உறிஞ்சி, அதன் உயிரைக் குடித்துவருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒன்ஜிசி செயல்பட்டுவருவதோடு, சுமார் 700 கிணறுகள் அமைத்து எண்ணெய் எரிவாயு எடுத்து வந்ததாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அடியக்கமங்கலம் பகுதியில் நூற்றுக்கு பத்து பேர் வீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு பலர் இறந்திருக்கிறார்கள்.

கதிராமங்கலத்தில், பலர் மாற்றுத்திறனாளிகளாக மாறி பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளக்குடி பகுதியில் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மனிதனின் தலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவங்களும்  நடந்துள்ளது. அரசுத் துறையாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, இழப்பு என்பது இழப்புதான். இதையெல்லாம் கவனத்தில்கொண்டே நாங்கள் ஓஎன்ஜிசி முற்றிலுமாக வெளியேற  வேண்டும் எனப் போராடிவருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2015-ம் ஆண்டு மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்குத் தடைபோட்டார். இப்போது, ஓஎன்ஜிசி நிறுவனமும் காவிரிப்படுகையில் மீத்தேன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் அரசு எனச் சொல்லிக்கொள்பவர்கள், அவர் அனுமதி தராத திட்டத்துக்கு அதை செயல்படுத்த வரும் நிறுவனத்தினரின் விளம்பரத்துக்கு அனுமதி தந்திருக்கிறார்கள். இதற்கான அனுமதியை உடனே திரும்பப் பெற வேண்டும். ஓஎன்ஜிசி குறித்த எந்த விளம்பரத்துக்கும் இனி அனுமதி தரக்கூடாது. அப்படி தந்தால், மறைமுகமாக இந்த அரசு மீத்தேன் எடுப்பதை அதரிப்பதாகவே அர்த்தம். இதுபோன்ற விளம்பர போர்டுகளை உடனே எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதற்காக பெரிய போரட்டம் நடத்துவோம்’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க