வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (08/09/2018)

கடைசி தொடர்பு:17:47 (08/09/2018)

`குடிதண்ணி சரியாவே வரல!’ - அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தம்பிதுரையைத் தெறிக்கவிட்ட பாட்டி!

குட்கா விவகாரத்தில் அடுத்தடுத்த சோதனைகள் நடந்துவரும் வேளையில், சொந்தத் தொகுதியில் இன்று காலை முதல் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை சகிதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் குறைகேட்பு முகாம் ஒன்றை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திவருகிறார்.

விஜயபாஸ்கர்

 காலை 8.30 மணியளவில் இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., நார்த்தா மலை ஆறுமுகம் உள்ளிட்டோருடன், சுமார் 120 கார்கள் புடைசூழ, அமைச்சர் விஜயபாஸ்கர், தனது தொகுதியான விராலிமலை தொகுதிக்குட்பட்ட கல்குடி, பூதகுடி, வடுகப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள மக்களைச் சந்தித்தார். கல்குடி, தாளப்பட்டி, பொருவாய், வடுகப்பட்டி,அம்பாள் நகர், ரத்னா கார்டன், திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டுவருகிறார்கள்.

காலையில், கல்குடி எனும் கிராமத்துக்கு முதலில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரும் தம்பிதுரையும், அங்கு கால்நடை மருத்துவமனையைத்  திறந்துவைத்தார்கள். அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய விஜயபாஸ்கர், " நாங்கள் தேர்தலுக்கு ஓட்டுகேட்டு வரவில்லை; மக்களின் குறைகேட்க வந்திருக்கிறோம். இங்கே கூடியிருக்கும் மக்கள், தங்களுடைய குறைகளைச் சொன்னால் உடனடியாக நிவர்த்திசெய்யப்படும்’’ என்று கூறிவிட்டு மைக்கை தம்பிதுரையிடம் கொடுத்தார்.

அவரோ, ``உங்கள் ஊரின் அடிப்படைப் பிரச்னையாக இருக்கும், தெருவிளக்கு எரியவில்லை. சாலை வசதி இல்லை. குடிநீர் வரவில்லை என்றால் சொல்லுங்கள். அந்தக் குறைகளை எங்களுடன் வந்துள்ள கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனே சரிசெய்வார்கள்’’ என்றார். `குறைகள் இருந்தால் கூட்டத்தில் இருக்கிற யாராவது வந்து மைக்கில் சொல்லுங்கள்’ என்று அவர் கூறவே, அங்கு வந்த பாட்டி அழகம்மாள், ``எங்க ஊருக்கு குடி தண்ணி சரியா வர்றது இல்ல. அதனால ரொம்ப  கஷ்டப்படுறோம்'’ என்று சொல்ல, மக்களும் கோரசாக அதையே வழிமொழிந்தார்கள். ஒருவழியாக சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற தம்பிதுரை, அடுத்தடுத்த கிராமங்களில் மக்களைச் சந்தித்தார்.

பாரப்பட்டி கிராமத்துக்குச் செல்லும்போது, அந்த ஊர்  பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை  ஆகியோரை முற்றுகையிட்டனர். "குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம். இதுகுறித்து கலெக்டருக்கும், அமைச்சருக்கும் பலமுறை தெரியப்படுத்திட்டோம். ஆனாலும் சரியாகல’’ என அங்கு கூடியிருந்த பெண்கள்  ஆவேசமாகப் பேச, அதிர்ச்சியடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர், `உங்கள் கோரிக்கையை எங்ககிட்ட சொல்லுங்க; கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்’ என்று கூறி, காலிக் குடங்களை அகற்றச் சொன்னார். ஆனால் பெண்கள் ஆவேசமாக, ''அதெல்லாம் முடியாது'' என்று கொதித்தனர். அடுத்து, அங்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியரிடம் மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித் தரும்படி  உத்தரவு போட்டுவிட்டு அங்கிருந்து ஜூட் விட்டனர்.

பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அமைச்சர் விஜயபாஸ்கரும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுவருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க