"இதற்காகத்தான் எங்கள்மீது குற்றம் சாட்டுகின்றனர்" - அமைச்சர் வேலுமணி அடடே விளக்கம்!

'நல்லாட்சிக்கு உறுதுணையாக இருப்பதால், எங்கள்மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்.பி.வேலுமணி

கோவையில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், "தனியார் தொலைக்காட்சி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டியுள்ளது. அதில் என்னைத் தொடர்புபடுத்தியதும் தவறு; புள்ளி விவரமும் தவறு. அந்த நிறுவனங்கள் 20 ஆண்டுகாலமாக தொழில் செய்து வருகின்றன. டெண்டர் கொடுத்ததில் விதிமுறை மீறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். தவறுசெய்யும் பட்சத்தில், முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தொழில் செய்பவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது என்பது இல்லை. டெண்டர் விதிமுறை மீறியுள்ளதா எனப் பார்க்க வேண்டும். இந்தச் செய்தி வந்தது ஆச்சர்யம் அளிக்கிறது. இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் வழக்குத் தொடர உள்ளோம்.

கோவையைப் பொறுத்தவரை அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கோவை, பொள்ளாச்சி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெறும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் நாளை முடிவுசெய்வார். எடப்பாடி, ஓ.பி.எஸ் நன்றாக ஆட்சி செய்து வருகிறார்கள். 50 ஆண்டுக்காலம் இல்லாத வளர்ச்சியைத் தற்போது தமிழகத்துக்குத் தந்துள்ளனர். நானும் தங்கமணியும் உறுதுணையாக உள்ளோம். எனவே, எங்கள்மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை நியாயமாகவும், நேர்மையாகவும் பணி செய்துவருகிறோம்

எனது அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, எந்த ஒதுக்கீடும் செய்யவில்லை. அனைத்தும் விதிமுறையைப் பின்பற்றியே நடக்கிறது. தி.மு.க காலத்தில் என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அம்மா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக நடக்கிறது. குட்கா விவகாரத்தில் தாங்கள் மீண்டு வருவோம் என சம்பந்தப்பட்ட அமைச்சரே விளக்கம் அளித்துள்ளார்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!