வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (08/09/2018)

கடைசி தொடர்பு:19:20 (08/09/2018)

`பழைய உறவை பி.ஜே.பி-யும் தி.மு.க-வும் புதுப்பித்துக்கொள்கிறார்கள்!’ - ரெய்டுக்கு விளக்கம் சொல்லும் தம்பிதுரை

தி.மு.கவும்-பி.ஜே.பி-யும் பழைய உறவை  புதுப்பித்துக்கொள்கிறது என்கிறார் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை.

தம்பிதுரை

இன்று காலை முதல் மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு,  30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் குறைகேட்பு முகாம்களை நடத்திவருகிறார். அதில் கலந்துகொண்ட தம்பிதுரை, பூதகுடி எனும் இடத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய தம்பிதுரை,`‘கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்தபோது, பாரதப் பிரதமர் மோடி,கோபாலபுரத்துக்கே சென்றார். அதன்பிறகு நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து பார்த்தால், பி.ஜே.பி-யும் தி.மு.க-வும் நெருக்கம் அதிகமாகி இருப்பது நன்றாகத் தெரியும். தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன.

இன்னொரு விஷயம், கடந்த சில வருடங்களாகவே பி.ஜே.பி மதவாத கட்சி, காவிக் கட்சி எனக் கூறிவரும் ஸ்டாலின், கலைஞரின் புகழ் அஞ்சலி கூட்டத்துக்கு பி.ஜே.பி-யை அழைத்திருக்கிறார். ஆனால், கலைஞர் கருணாநிதி உடல்நிலை மோசமானது முதல் இறந்தது வரை, அம்மாவின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அரசு, கருணாநிதிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை வழங்கினோம். ஆனால், எங்களை கலைஞரின் இறுதி அஞ்சலிக் கூட்டங்களுக்கு அழைக்கவில்லை. இக்கட்டான சூழலில் உதவிசெய்த எங்களை அழைக்காமல், பாரதிய ஜனதா கட்சியை அழைத்ததற்கான காரணம் என்ன?. தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் பழைய உறவை புதுப்பித்துக்கொள்ள நினைக்கிறார்கள்.

குட்கா விவகாரத்தில் சிபிஐ கடந்த 5-ம்தேதி ரெய்டு நடத்தியதற்கான காரணம், அன்றைய தினம் ஸ்டாலினின் அண்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தனது தந்தைக்காக நடத்திய அமைதிப் பேரணிக்குத்  திரண்ட கூட்டத்தின் செய்தி வெளியே பரவலாகப் பேசப்படக்கூடாது என்பதற்காகத்தான். பேரணி நடந்த அதே தினத்தில், குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ ரெய்டை மத்திய அரசு, அ.தி.மு.க மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஏவி  சூழ்ச்சிசெய்கிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் சிபிஐ, காங்கிரஸ் கைப்பாவை எனத் தி.மு.க கூறியது. ஆனால், இப்போது குட்கா விவகாரத்தில் அதைச் சொல்ல மறுப்பது ஏன்?. பி.ஜே.பி-யுடன் தி.மு.க  ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க, பி.ஜே.பி-யின் கைப்பாவையாகச் செயல்படுவதாக ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் எப்போதும் பி.ஜே.பி-யை ஆதரித்ததில்லை. முத்தலாக், ஜிஎஸ்டி மசோதாக்களை எதிர்த்து வாக்களித்துள்ளோம். ஏதோ சில சமயங்களில் ஆதரவு தெரிவித்தோம் அதைக் கொச்சைப்படுத்தி அ.தி.மு.க, பி.ஜே.பி-யின் கைப்பாவை எனக் குறிப்பிடுகிறார்கள். இப்படியிருக்க, நாம் ஏன் இந்தச் சூழலில் தி.மு.க- பி.ஜே.பி உறவைப் சந்தேகப்படக் கூடாது?. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால், தமிழக பா.ஜ.க-வின் செயல்பாடுகளில் மாற்றம் உள்ளது. தி.மு.க-வும்  பி.ஜே.பி-யும் பழைய உறவைப் புதுப்பிக்க முயன்றுவருகிறார்கள் என்பதுதான் உண்மை. முன்னாள் மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், அரசியல்வாதியாக மாறிவிட்டார். அவர் பதவியில் இருந்தபோது இப்படியான பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியிருக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர் எந்த அளவுக்கு கிராமம் கிராமமாகச் சென்று பயணம் செய்கிறார்; மக்களைச் சந்திக்கிறார்... விஜயபாஸ்கர் மிகச் சிறப்பாக துறைரீதியாகச் செயல்பட்டுவருகிறார். அவரது செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், சிபிஐ மூலம் அவரை  முடக்க நினைக்கிறார்கள். இதைப் பல வருடங்களாக மத்தியில் பொறுப்பில் இருக்கும், நீண்ட வருடங்களாக அரசியலில் இருக்கும் எனது கருத்து இதுதான். சிபிஐ-யை பாரதிய ஜனதா இயக்குகிறது.

தம்பிதுரை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம். அந்த வழியில், 7 பேர் விடுதலை என்பதுதான்  தமிழக அரசின் நோக்கம். நாளை நடக்கும் மந்திரிசபைக் கூட்டத்தில், 7 பேர் விடுதலைகுறித்து முடிவெடுக்கப்படும்’’என்றார்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றால், அ.தி.மு.க-வுடன் அ.மு.மு.க-வை இணைப்போம் எனத் தங்க.தமிழ்ச்செல்வன் கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தம்பிதுரை, ``வெற்றி குறித்து மக்கள்தான் முடிவு எடுப்பார்கள். சவால் கூடாது. இரட்டை இலையும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா ஆகியோர் எங்களிடம் உள்ளவரை,  மக்களின் ரத்தத்தில் கலந்த இயக்கம் இது. இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது’ என்றார் ஆவேசமாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க