`நாங்களே போலீஸில் ஒப்படைக்கிறோம்!’ – புல்லட் நாகராஜின் குடும்பத்தார் ஆவேசம்

மதுரை மத்திய சிறைச்சாலையின் சிறைத்துறை எஸ்.பி., ஊர்மிளாவுக்கு கொலைமிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜ் என்ற ரவுடியை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்த நிலையில், ”அவனை நாங்களே போலீஸில் ஒப்படைக்கிறோம்” என அவரது தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் ஆவேசமாகக் கூறுகின்றனர்.

புல்லட் நாகராஜின் அண்ணன் முருகன்

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் உள்ளது புல்லட் நாகராஜின் வீடு. இன்று மதியம், அங்கு சென்றோம். ’அனுமதி இன்றி யாரும் உள்ளே வரக்கூடாது. மீறினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என போர்டில் எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே, S.நாகராஜ் BA.BL என்றும், அதன் கீழே PRESS என்றும் போடப்பட்டிருந்தது. வீட்டுக்குள் புல்லட் நாகராஜின் அம்மா மற்றும் அண்ணன் இருந்தனர். “அவன் பேசியது தவறுதான். அதற்காக நீங்கள் அவனிடம்தான் போய் கேட்க வேண்டும். காலையில் அவ்வளவு போலீஸார் வீட்டுக்குள் வந்து தேடுகிறார்கள். எங்களை மிரட்டுகிறார்கள்” என்றார் புல்லட் நாகராஜின் அண்ணன் முருகன்.

புல்லட் நாகராஜின் தாய் மாலா

அருகில் இருந்த புல்லட் நாகராஜனின் அம்மா மாலா பேசும்போது, ”நான் இதய நோயாளி, சிறுநீரகக் கோளாறும் உள்ளது. வாழ்க்கையைப் போராடி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த நிலையில், போலீஸார் வீட்டுக்குள் வந்து நாகராஜைத் தேடுகிறோம் என்று சொல்லிவிட்டு, எங்களை மிரட்டுகிறார்கள். அவன் வீட்டில் இல்லை. வீட்டுக்கு வந்தால், நாங்களே அவனை போலீஸில் ஒப்படைக்கிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!