வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/09/2018)

கடைசி தொடர்பு:20:00 (08/09/2018)

`அடக்குமுறைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்!’ - யோகேந்திர யாதவ் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

பசுமைவழிச்சாலை திட்டத்தால், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த யோகேந்திர யாதவை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்


சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சேலம் வரை சுமார் 277 கி.மீ தொலைவுக்கு ரூ.10,000 கோடி செலவில் பசுமைச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விவசாய நிலங்கள், காடுகள், மலைகள், நீர்நிலைகள் என இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு இந்தச் சாலை அமையும் என்பதால், ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதனால், சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

 இந்நிலையில், 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் சிலர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எட்டுவழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்திக்கச் சென்றனர். அப்போது, சி.நம்மியந்தல் பகுதியில் வைத்து அவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.இந்நிலையில், யோகேந்திர யாதவ் கைதுக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ``பசுமை வழிச்சாலைத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்த, யோகேந்திர யாதவ் கைதை தி.மு.க கண்டிக்கிறது. ஜனநாயகரீதியாகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறைக்கு, அ.தி.மு.க அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.