‘இனியும் அதுபோன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது!’ - கடுகடுத்த வைகோ | vaiko slams BJP government over petrol-diesel price hike

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/09/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/09/2018)

‘இனியும் அதுபோன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது!’ - கடுகடுத்த வைகோ

“மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என ஈரோட்டில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வைகோ பேசினார்.

வைகோ

செப்டம்பர் 15-ம் தேதி ம.தி.மு.க முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. மாநாட்டின் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்கும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும் இன்று வைகோ ஈரோட்டிற்கு வந்தார். காலை 6 மணியளவில் மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று, ஏற்பாடுகளை பார்வையிட்ட வைகோ, அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “2014-ம் ஆண்டு மோடி அரசு பொறுப்பேற்ற போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 109.5 டாலர். இன்றைக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 85 டாலர்தான்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதால்தான், பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது என பதவியேற்ற சமயத்தில் பிரதமர் மோடி காரணம் கூறினார். இனியும் அதுபோன்ற காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. மோடி அரசு பதவியேற்றபோது, பெட்ரோல் மீதான உற்பத்தி வரி ரூ.9.20 காசுகளாக இருந்தது. இன்றைக்கு அது ரூ.19.49 காசுகளாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, ரூ.3.46 காசுகளாக இருந்த டீசல் மீதான உற்பத்தி வரி இன்றைக்கு 15.33 காசுகளாக உயர்ந்திருக்கிறது.

இப்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தாறுமாறாக மோடி அரசு உயர்த்தியதுதான் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணம். மாநில அரசும் தன்னுடைய பங்கிற்கு பெட்ரோலிற்கு ரூ.34 மற்றும் டீசலுக்கு ரூ.25 என மதிப்புக் கூட்டு வரியை அதிகரித்திருக்கிறது. இது எல்லாம்தான் பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கான காரணம்” என்றார். தொடர்ந்து பேசியவர்,“இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வருகின்ற செப்டம்பர் 10-ம் தேதி, இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. அதற்கு ஆதரவளித்து ம.தி.மு.க பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும்” என்றார்.   


[X] Close

[X] Close