`தொழிலாளர்கள் பெயரில் கடன்பெற்று கோடிக்கணக்கில் மோசடி!’ - விருதுநகர் பருப்பு மில் அதிபர் வீட்டுக்கு சீல்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்த விருதுநகரைச் சேர்ந்த பருப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பருப்பு மில் அதிபர் வேல்முருகன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறையினர் இன்று சீல் வைத்தனர்.

விருதுநகர்

விருதுநகர் ஒ.எம்.எஸ் பருப்பு மில்லின் உரிமையாளர் வேல்முருகன் என்பவர், ஆட்டோ டிரைவர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட தனக்கு தெரிந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலார்களின் பெயரில் தேனி,  மாவட்டங்கலிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிகளில் பலகோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு வங்கி அதிகாரிகளும் துணை போயுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் புகார் அளிக்கவே, தேனி தென்கரை போலீசார் ஓ.எம்.எஸ்.மில் அதிபர் வேல்முருகன், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். 

இந்த  நிலையில் இன்று விருதுநகரிலுள்ள வேல்முருகனின் உறவினர் கலைச்செல்வி என்பவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் தீடீரென  சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோல் இந்த மோசடியில் தொடர்புடைய செண்பகன் என்பவரின் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள், வர்த்தக அமைப்புகளில் உள்ள முக்கியப்புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மொத்த வியாபாரம் என்ற பெயரில் வியாபாரமே செய்யாமல் போலியான நபர்களை காட்டி  வங்கியில் கோடி கோடியாக கடன் பெற்று மோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சோதனையின் முடிவில் வேல்முருகன் வீட்டிற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!