`இது சர்வாதிகாரம்!’ - யோகேந்திர யாதவ் கைதுக்கு கமல் கண்டனம் | kamal condemn yogendra yadav arrest

வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (08/09/2018)

கடைசி தொடர்பு:21:52 (08/09/2018)

`இது சர்வாதிகாரம்!’ - யோகேந்திர யாதவ் கைதுக்கு கமல் கண்டனம்

யோகேந்திர யாதவ் கைதுக்கு மக்கள் நீதி மையக்கட்சியில் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல்

'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் சிலர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் எட்டுவழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்திக்கச் சென்றபோது, சி.நம்மியந்தல் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளது தமிழக காவல்துறை. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில்,``வெளிமாநிலத்திலிருந்து ஒரு அரசியல்வாதி யோகேந்திர யாதவ், நம் விவசாயிகளிடம் கருத்துக் கேட்க தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது விமர்சனத்துக்குரியது. கடும் கண்டனத்துக்குரியது. கருத்து கேட்டதைக் கூட தடுக்கும் அதிகாரம் எப்படி இவர்களுக்கு வந்தது. சட்டத்தை ஒரு காரணமாக சொல்லி குரல்களே எழாமல் செய்யும் இந்த செயல் சர்வாதிகாரம் என்று எனக்கு தோன்றுகிறது. இல்லை இது ஜனநாயக நாடு என்று நினைவுபடுத்த வேண்டியதாயிருக்கிறது. இன்னொன்றும் நினைவுபடுத்துகிறேன். ஜனநாயகத்தின் வழியாகத் தான் சர்வாதிகாரிகள் உலகெங்கிலும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறார்கள் பலமுறை. அதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  மக்கள் கருத்துக்களை தெளிவாக பயமின்றி எடுத்துச்சொல்லும் சூழல் வர வேண்டும். அப்படி வரவில்லை  என்றால், வரவழைக்க வேண்டும். யோகேந்திரயாதாவின் கைது கண்டனத்துக்குரியது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.