56 வயதாகும் என்னால் ஓடமுடிகிறது; மாணவர்களால் முடியாதா? - உற்சாகப்படுத்தும் சைலேந்திர பாபு!

``10 மருத்துவமனை நடத்துவதை விட, ஒரு மாரத்தான் போட்டி நடத்துவது சிறப்பானது” என மாரத்தான் நிகழ்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சைலேந்திரபாபு

கன்னியாகுமரியில், மாரத்தான் நிகழ்ச்சி நடத்துவதற்காகக் கன்னியாகுமரி தடகள சங்க நிர்வாகிகளுடன் ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு நாகர்கோவிலில் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது சைலேந்திர பாபு பேசுகையில், "வயது கூடும்போது உடலில் நோய் பாதிப்புகள் ஏற்படுவது போன்று, மனதிற்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் ஓட்ட பயிற்சியில் ஈடுபடுவர்களுக்கு உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.  10 மருத்துவமனைகள் நடத்துவதை விட, ஒரு மரத்தான் போட்டி நடத்துவது சிறப்பானது. கன்னியாகுமரியில் மக்களை ஊக்குவிக்கும், விதமாக மரத்தான் ஓட்டம் டிசம்பர் மாதம் 29-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர்கள் மரத்தானில் கலந்துகொண்டால், பெரியவர்களுக்கும் ஓட வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கும். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உடல் பருமன் நோய் இன்று அதிகரித்து வருகிறது.

சைலேந்திரபாபு

உணவைக் கட்டுப்படுத்தாமல், குடல் சுருக்க அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் பல மரணங்களும் சம்பவிக்கின்றன. 56 வயதாகும் எனக்கே ஓடமுடிகிறது என்றால் மாணவர்களுக்கு ஓட முடியாதா. தமிழகத்தில் இதுவரை 25 மாரத்தான் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். எனவே, ஓட்டப் பயிற்சியை ஊக்குவிக்கும் மாரத்தான் நிகழ்ச்சியைத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்துவோம்" என்றார். இந்த நிகழ்ச்சியில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளை ஒழிக்கும் விதமாக, பர்ஸ் வடிவில் உள்ள துணிப் பையை, நக்‌சல் தடுப்பு இன்ஸ்பெக்டர் சாம்சன், ஏ.டி.ஜி.பி சைலேந்திர பாபு-விடம் வழங்கினார். அந்த துணிப் பையை வடிவமைத்ததற்காக இன்ஸ்பெக்டர் சாம்சனை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!