வெளியிடப்பட்ட நேரம்: 02:41 (09/09/2018)

கடைசி தொடர்பு:02:41 (09/09/2018)

`தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கி உள்ளது' - கட்சியைப் புதுப்பிக்கும் நடிகர் கார்த்திக்!

தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கி உள்ளதால் கட்சியைப் புதுப்பித்து மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளேன் என நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். 

கார்த்திக்

நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றினை நடத்தி வந்தார்.  இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தனது நாடாளும் மக்கள் கட்சியை சைலன்ட் மோடில் வைத்திருந்தார் கார்த்திக். இதனால் மக்களும் கார்த்திக்கை சில ஆண்டுகளாக மறந்து இருந்தனர். இந்நிலையில் ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் வரிசையாகக் கட்சி துவக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நடிகர் டி.ராஜேந்தரும் தனது கட்சியினை புதுப்பித்து தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தார். இவரைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களுக்கு முன் தானும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கார்த்திக் சென்னையில் அறிவித்திருந்தார்.
 
இதன் தொடர்ச்சியாக நேற்று கமுதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு நடிகர் கார்த்திக் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார். அங்குத் தேவர் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''கடந்த இரண்டரை ஆண்டுகளாக எனது நாடாளும் மக்கள் கட்சியினை தீவிர அரசியலில் ஈடுபடுத்தாமல் ஒதுங்கியிருந்தேன். அதற்காக மக்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இப்போது இந்தியாவும், தமிழகமும் பரிதாப நிலையில் உள்ளது. தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கி உள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை செயல்படுத்தவில்லை. 

இதனால் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. அதனைச் செய்ய அரசியல்வாதிகளுக்கு மனம் இல்லை. பணமே குறியாக உள்ளனர். மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். தற்போது எனது கட்சியில் இருக்கக் கூடாதவர்களை நீக்கி விட்டு சேவை மனப்பான்மை கொண்ட நிர்வாகிகளை நியமிக்க உள்ளேன். இதன் பின் புதிய விதிமுறைகளுடன்  எனது கட்சி தீவிர அரசியலில் ஈடுபடும். அதற்கு முன்னதாக அய்யா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி ஆசி பெற வந்தேன்'' என்றார். அடுத்த மாதம் தேவர் குருபூஜை நடக்க உள்ள நிலையில் கார்த்திக் புதிய கட்சியினை துவக்க இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.