வெளியிடப்பட்ட நேரம்: 03:32 (09/09/2018)

கடைசி தொடர்பு:03:32 (09/09/2018)

`பெட்ரோலில் எத்தனாலை கலந்து விற்க அனுமதியுங்கள்' - மத்திய அரசுக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை!

பெட்ரோலில் இயற்கைக்கு கேடு விளைவிக்காத எத்தனால் எரிபொருளை கலந்து விற்க அனுமதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அர்ஜூன் சம்பத்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்துகொண்டார். நாகாராஜா கோயிலில் சாமி கும்பிட்ட அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் ஓட்டி எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி மூன்று முக்கிய 3 கோயிலில் சிலைகள் திருடப்பட்டுள்ளன. களவுபோனது பஞ்சலோக சிலை இல்லை என்றும் செம்பு சிலை என்பதால் மதிப்பு குறைவுதான் என என ஆய்வு செய்து கூறுவதில்தான் அறநிலையத்துறை அதிகாரிகள் மும்முரமாக இருந்தனர். ஆனால் திருட்டு குறித்து புகார் கொடுக்க அறநிலையத்துறை முன்வரவில்லை. பல தொன்மை வாய்ந்த சின்னங்கள் கன்னியாகுமரி மாவட்ட வழிபாட்டு தலங்களில் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் கேரளா மற்றும் தமிழ் நாட்டிற்கு மையமாக இருப்பதால் சிலை கடத்தல் கும்பல் இங்கு மையம் கொண்டிருக்கிறார்கள். கோயில் சிலைகள், நகைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. சிலைகளை பாதுகாப்பதற்காக ஒரு பெட்டகத்தில் வைப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். திருக்கோவில் பாதுகாப்பு படை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் தனிப்படை உள்ளது. அதில் முதியவர்கள் மட்டுமே உள்ளன. அந்த படை புதுப்பிக்கப்பட வேண்டும். கோயில் விக்கிரகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

அர்ஜூன் சம்பத்

பெட்ரோல், டீசலை ஜி.எஸ் டி. வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். பெட்ரோலில் இயற்கைக்கு கேடு விளைவிக்காத எத்தனால் எரிபொருளை கலந்து விற்க அனுமதிக்க வேண்டும். பெட்ரோல் விலை ஒருபுறம் இருக்கச் சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்வதற்காக மத்திய அரசை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்துவோம். வரும் 10ம் தேதி தி.மு.க, கம்யூனிஸ்ட் இணைந்து நடத்தும் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம். அவர்கள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் கலந்துகொள்வார்கள் என்பதால்  நாங்கள் தனியாக போராடுவோம். விநாயகர் விழா அமைதியான முறையில் நடக்க வேண்டும். இயற்கைக்குப் பாதிப்பு இல்லாமல் பசுமை விழாவாக விநாயகர் சதூர்த்தியை கொண்டாடுகிறோம். நெல்லையில் தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சி நடக்கிறது. காவிரி புஷ்கரத்தில் 80 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள். காவிரியில் புஷ்கர விழா நடந்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சியில் ஒரு கோடிபேர் வருவார்கள். இந்த விழாவிற்காக அரசும், அறநிலையத்துறையும் நிதி ஒதுக்க வேண்டும். நதிகள் வளமாக இருந்தால்தான் விவசாயம் செழிக்கும். விவசாயிகளின் தோழன் என கூறும் நல்லகண்ணு  நதிக்கு விழா நடத்த எதிர்ப்பு தெரிவிக்கலாமா? தமிழக அரசு முன்னின்று தாமிரபரணி புஷ்கரம் விழாவை நடத்த வேண்டும்" என்றார்.