`நன்னடத்தை சான்றிதழில் ராக்கிங் நடவடிக்கைகள்' - மாணவர்களை எச்சரிக்கும் அமைச்சர்!

ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை அவர்களது நன்னடத்தை சான்றிதழில் பதிவிடப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கே.பி.அன்பழகன்

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெறும் ராக்கிங் மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்  கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது, ``ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அது யாராக இருந்தாலும். பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் என அனைவரும் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை அவர்களது நன்னடத்தை சான்றிதழில் பதிவிடப்படும். பெரும்பாலான கல்லூரி வளாகங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றது" என்றார்.

அப்போது உயர்கல்வி துறையில் மாணவர்கள் கல்வி உதவித் தொகையில் முறைகேடு நடந்துள்ளதாகப் பாமக நிறுவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``ராமதாஸ் வெளியிடுகின்ற அறிக்கைகள், கொடுக்கும் புள்ளி விவரங்கள் அனைத்துமே அவருக்கு வேண்டப்பட்டவர்களால் தயாரிக்கப்படுகிறது. அதை ஆராய்ந்து பார்த்தால் அதில் உண்மை ஏதும் இருக்காது. மாணவர்கள் உதவித் தொகையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அவரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!