‘இடைத்தேர்தலுக்கு முன்பே கோஷ்டி பூசலா’ - அமைச்சர் நடத்திய கூட்டத்தால் அதிமுகவினர் அதிருப்தி

மாவட்ட செயலாளர் இல்லாமல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிராச்சாரக்குழுவுக்கான ஆலோசனை கூட்டத்தை அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் நடத்தியது மதுரை புறநகர் அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலைகளை அதிமுகவும், அமமுகவும் தொடங்கிவிட்டனர்.  திருப்பரங்குன்றம் தொகுதி மதுரை புறநகர் மாவட்டத்தில் வருவதால் புறநகர் மாவட்ட செயலாளரான ராஜன்செல்லப்பா தன்னுடைய ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்தும் வகையில் முதல் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தினார். அடுத்ததாக வருகிற திங்கள் கிழமை பூத் கமிட்டி கூட்டம் நடத்தவுள்ளதாக ராஜன்செல்லப்பா அறிவித்துவிட்டு வெளியூர் சென்றுவிட்ட நிலையில்,  திடீரென்று பிரச்சாரக்குழு ஆலோசனை கூட்டத்தை மதுரை பாண்டி கோயில் திடலில் நேற்று இரவு  கூட்டினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

ராஜன் செல்லப்பா இல்லாததால் இதில் புறநகர் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. எம்.எல்.ஏக்கள், பெரியபுள்ளான், மாணிக்கம், சரவணன் மட்டும் கலந்து கொண்டனர். " அதிகமான வாக்குகளில் வெற்றி பெற வேண்டும், நமக்கும் தி.மு.கவுக்கும் தான் போட்டி, வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்படும் " என்று கூட்டத்தில் பேசினார் அமைச்சர் உதயகுமார். உற்சாகமாக நடந்திருக்க வேண்டிய கூட்டம் அதிருப்தியில் முடிந்திருக்கிறது.

புறநகர் மாவட்ட செயலாளர் இல்லாத நேரத்தில் கூட்டம் போட்டு தன்னை முன்னிலைப்படுத்த நினைக்கிறார் என்று ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் புகார் எழுப்பி வருகிறார்கள். இடைதேர்தல் பணிகள் தொடங்கும்போதே கோஷ்டிப்பூசலா என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.கவினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!