வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (09/09/2018)

கடைசி தொடர்பு:15:42 (09/09/2018)

`எங்களுக்கு எல்லாம் கொடுத்தது இந்த பள்ளிதான்!’ - மணக்கோலத்தில் நன்கொடை அளித்து நெகிழ்ந்த மணமக்கள்

திருமணம் முடிந்த உடனே கோயிலுக்கு செல்லும் புதுமண ஜோடிகளுக்கு மத்தியில் மணமக்களான ராஜேஷ் - அகிலா தம்பதியினர் தாலி கட்டிய கையோடு, அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர்.

பள்ளிக்கு நிதி உதவி அளிக்கும் தம்பதி

மன்னார்குடி அருகே உள்ள பாலையக்கோட்டை. கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது .ஆரம்ப காலத்தில் நடுநிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளியில் ராஜேசும், அகிலாவும் படித்துள்ளனர். ராஜேஷ் துபாயில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ராஜேஷ் - அகிலாவிற்கு திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதியருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் மணமக்கள் வெளியே செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். எங்கு செல்கிறீர்கள் என  உறவினர்கள் கேட்டதற்கு, நாங்கள் இருவரும் படித்த பள்ளிக்குச் செல்கிறோம் என சொல்ல அனைவரும் புருவத்தை உயர்த்தியதோடு ஆச்சர்யம் தாங்க முடியாமல் அவர்களுடனேயே சிலர் சென்றுள்ளனர்.

இருவரும்  தாங்கள் படித்த பள்ளிக்குள் நுழைந்ததுமே ஒருவித நெகிழ்ச்சியான மகிழ்ச்சி  அவர்களை தொற்றி கொண்டது. அவர்கள் படித்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் என அனைத்தையும் மணக்கோலத்திலேயே ஒரு ரவுண்டு அடித்தனர். பின்னர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாடினர். பிறகு, புதிய நோட் ஒன்றில் மொய் நூல் என தலைப்பிட்டு இருவரும் தலா ஆயிரம் ரூபாய் பணத்தை பள்ளியின் வளர்ச்சி  நிதிக்காக நன்கொடையாகக் கொடுத்து மொய் எழுதியுள்ளார்கள். மேலும், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோன்ஸின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மண்டபத்திற்கு திரும்பிய அந்த ஜோடியை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்ததோடு,  கைகுலுக்கி பாராட்டவும் செய்தனர்.

ராஜேஷ் - அகிலா தம்பதியினர்இதுகுறித்து  ராஜேஷிடம் பேசினோம், ``நாங்கள் படித்தபோது ஆசிரியராக இருந்தவர் ஜோன்ஸ். அவர் எங்களிடம், `நீங்கள் பெரியவர்கள் ஆகி வேலைக்குச் சென்றபிறகு, இந்த பள்ளிக்கு எதாவது செய்ய நினைத்தால் பள்ளியின் வளாகத்திற்கு வந்து மரக் கன்றுகளை நடுங்கள். பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுங்கள். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை இதேபள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள்’ என சொன்னார் அவை அப்படியே எங்கள் மனதில் பதிந்து போனது.

நான், கடந்த நான்கு வருடங்களாக துபாயில் பணிபுரிந்து வருகிறேன். திருமணம் நடக்கும் சில தினங்களுக்கு முன்தான், இங்கு வந்தேன். அப்போதே, தாலி கட்டிய கையோடு நாம் படித்த பள்ளிக்கு செல்ல வேண்டும் என அகிலாவுடன் கூறினேன். அதைக் கேட்டு அவரும் மகிழ்ச்சியாக தலையாட்டினார். அதேபோல், நாங்கள் படித்த பள்ளிக்குச் சென்று நன்கொடை வழங்கி, இனிப்பு கொடுத்து, ஆசிரியரின் காலில் விழந்து வணங்கினோம். எங்களுக்கு எல்லாமும் தந்தது இந்த பள்ளியும் ஆசிரியர்களும்தான். அவர்களை நினைவில் கொள்ளும் வகையில் இனிமேல் அடிக்கடி இந்த பள்ளிக்கு வருவோம். எங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைக்கூட இங்குதான் படிக்க வைப்போம்’’ என மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அதை ஆமோதிப்பதுபோல் வெட்கத்தோடு தலையசைத்தார் அகிலா.

தலைமை ஆசிரியர் ஜோன்ஸ் கூறுகையில், ``திருமணம் முடிந்த உடன் மணமக்கள் கோயிலுக்குச் செல்வார்கள் அல்லது தங்களது வீடுகளுக்கு சென்று பூஜையறையில் சாமி கும்பிடுவார்கள். மணக்கோலத்தில் தேர்வெழுதச் சென்ற மணமக்களைக் கூட பார்த்திருக்கிறோம். ஆனால், ராஜஷும் அகிலாவும் தாலிகட்டிய கையோடு அவர்கள் படித்த பள்ளிக்கு வந்து நன்கொடை செலுத்தி, எங்களோடு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எங்களை ஆனந்தபடுத்தியிருக்கிறது. இந்த பள்ளியே அவர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்திய நெகிழ்ச்சி சம்பவமும் நடந்தது’’என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க