`விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் இப்படி இருக்க வேண்டும்!’ - ஏ.டி.எஸ்.பி அறிவுரை

விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி எச்சரித்துள்ளார்.

                                               

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு பெரம்பலூர் போலீஸார், மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாகவும், சிலைகள் ஊர்வலம் தொடர்பாகவும் விழாக்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு ஏ.டிஎஸ்.பி அழகுத்துரை தலைமை தாங்கினார். 

                               

கூட்டத்தில் பேசிய அவர், ``விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு மேற்கூரைகள் இரும்பு தகடு அல்லது சிமெண்டிலான கூரைகளைக் கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விழாக் குழுவினர் பயன்படுத்தக் கூடாது. பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை ஆகியவை அருகே விநாயகர் சிலைகள் வைக்கக் கூடாது. சிலை வைக்கும் இடத்தில் பெட்டி வடிவிலான ஒலி பெருக்கியைப் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தைக் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்குள் முடிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது வெடி வெடிக்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் ஊர்வலத்தின் போது மற்ற மதத்தவர்களைப் பற்றி வன்முறை தூண்டும் வகையில் பேசக்கூடாது. இதனை மீறிச் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அதிரடியாகப் பேசிமுடித்தார். மேலும், அவர் விழாக்குழுவினரின் சந்தேகங்களுக்கு பதிலளித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விழாக் குழுவினர் மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!